திண்டுக்கல்,
தேனி, திண்டுக்கல் மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், திண்டுக்கல்லில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், துணை முதல்-அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார்.
இதற்காக அவர், நேற்று இரவு கரூரில் இருந்து திண்டுக்கல்லுக்கு காரில் வந்தார். வேடசந்தூர் அருகே கல்வார்பட்டி பகுதியில் அவருடைய கார் வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் உள்ள சோதனைச்சாவடியில், சட்டமன்ற தேர்தலையொட்டி நிலையான கண்காணிப்பு குழு அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
இதனால் அந்த வழியாக வந்த துணை முதல்-அமைச்சரின் காரையும் அதிகாரிகள் சோதனையிட வந்தனர். அதை அறிந்த துணை முதல்-அமைச்சர் தனது காரை திறந்து அதிகாரிகள் சோதனையிடுவதற்கு ஒத்துழைப்பு அளித்தார்.
அதையடுத்து நிலையான கண்காணிப்பு குழு அதிகாரிகள், துணை முதல்-அமைச்சரின் காரை முழுமையாக சோதனை செய்தனர். அதன்பின்னரே துணை முதல்-அமைச்சரின் கார் அங்கிருந்து புறப்பட்டு திண்டுக்கல்லுக்கு வந்தது. இந்த சோதனையின்போது வேடசந்தூர் டி.எஸ்.பி. பவித்ரா, சார்பு ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட போலீசார் உடன் இருந்தனர்.