தமிழக செய்திகள்

தேர்தல் ஆயத்த பணிகள்.. தலைமை தேர்தல் கமிஷனர் இன்று சென்னை வருகை

சட்டமன்ற தேர்தலுக்கான தயார் நிலை பணிகளை மதிப்பீடு செய்வதற்கு இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் இன்று சென்னைக்கு வருகிறார்.

சென்னை,

தமிழகத்தில் ஓரிரு மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சட்டசபை தேர்தல் தயார் நிலையை மதிப்பீடு செய்யும் பணி 26 மற்றும் 27-ந் தேதிகளில் (நாளை மற்றும் நாளை மறுநாள்) தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் தலைமையில் நடக்க இருக்கிறது. அதற்காக அவரும், அவரது குழுவினரும் சென்னை வர உள்ளனர்.

இதற்காக இன்று (25-ந் தேதி) காலை 9 மணியளவில் சென்னைக்கு விமானம் மூலம் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார், கமிஷனர் கள் சுக்பிர்சிங் சாந்து, விவேக் ஜோஷி மற்றும் துணை கமிஷனர்கள் மானேஷ் கார்க், பானு பிரகாஷ், பவன்குமார் சர்மா, சஞ்சய்குமார், ஆசிஷ் கோயல் வருகின்றனர். அவர்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வரவேற்கிறார்.

பின்னர் அவர்கள் விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரிக்கு புறப்பட்டுச் செல்கின்றனர். புதுச்சேரியில் நடக்கும் சட்ட மன்ற தேர்தல் தயார் நிலை பணிகளை அவர்கள் ஆய்வு செய்கின்றனர்.

நாளை (வியாழக்கிழமை) தமிழகத்தில் நடந்து வரும் தேர்தல் முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்கின்றனர். அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதி களை அழைத்து ஆலோசனை செய்கின்றனர். பின்னர் பிற்பகலில் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், டி.ஐ.ஜி., ஐ.ஜி. உள்ளிட்ட உயர் போலீஸ் அதி காரிகளிடம் ஆலோசனை மேற்கொள்கின்றனர்.

நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலையில் மத்திய அரசின் அனைத்து விசாரணை முகமைகளின் அதிகாரிகளை தலைமை தேர்தல் கமிஷனர் அழைத்து ஆலோசனை நடத்துவார். அதன் பிறகு நண்பகலில் பத்திரிகையாளர்களுக்கு ஞானேஷ்குமார் பேட்டி அளிப்பார். அப்போது தமிழகத்தில் தேர்தல் தயார் நிலை குறித்து அவர் கருத்து தெரிவிப்பார்.

அதன்பின்னர் டெல்லி திரும்பும் அவர்கள் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் நடத்தும் தேதியை அறிவிக்கும் தினத்தை முடிவு செய்வார்கள் என்று கூறப்படுகிறது.