சென்னை,
234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபைக்கான தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 23-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெற்று, அதே நாளில் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும், வேட்பாளர் தேர்வு, நட்சத்திர பேச்சாளர்கள் தேர்வு உள்ளிட்ட தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன.
இந்நிலையில் தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு தொடங்கி வருகிற 6-ந்தேதி (திங்கட்கிழமை) வரை நடக்கிறது. 8 நாட்கள் அறிவிக்கப்பட்டாலும், 4 நாட்கள் மட்டுமே வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய முடியும். குறிப்பாக, வருகிற 31-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மகாவீர் ஜெயந்தி, ஏப்ரல் 1-ந்தேதி வங்கி முழு வருட கணக்கு முடிவு, 3-ந்தேதி புனித வெள்ளி, 5-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய 4 நாட்கள் விடுமுறை நாட்களாக அமைந்துள்ளது. எனவே அன்றைய நாட்களில் வேட்பு மனு தாக்கல் செய்ய இயலாது.
நாளை 30-ந்தேதி (திங்கட்கிழமை), 2-ந்தேதி, 4-ந்தேதி மற்றும் 6-ந்தேதி ஆகிய 4 நாட்களில் மட்டுமே குறிப்பிட்ட நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனுக்களைச் சமர்ப்பிக்க வேண்டும். வேட்பாளர்கள் https://suvidha.cci.gov.in என்ற இணையதளம் மூலமாக வேட்புமனு தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
மனு தாக்கலுக்கு கடைசி நாளான 6-ந்தேதி சுபமூகூர்த்த தினம் என்பதால், அன்றைய தினம் அதிக அளவில் வேட்புமனுக்கள் பெற வாய்ப்பு உள்ளது. கால அவகாசம் குறைவாக உள்ளதால், வேட்பாளர்கள் ஆவணங்களை முன்கூட்டியே தயார் செய்து நெரிசலை தவிர்க்க வேண்டும். வேட்பு மனுக்கள் பரிசீலனை வருகிற 7-ந்தேதி நடக்கிறது. வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற வருகிற 9-ந்தேதி கடைசி நாள் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.