தமிழக செய்திகள்

பராமரிப்பு பணியால் தாமதமாக இயக்கப்படும் மின்சார ரெயில்கள்: சென்டிரலில் அலைமோதிய கூட்டம்

இதனால் பணிக்கு வர, பணி முடிந்து வீடு திரும்பும்போது வெகு நேரம் ரெயிலுக்காக காத்திருக்கும் சூழ்நிலை உள்ளது என பயணிகள் வேதனை தெரிவித்தனர்.

சென்னை

சென்னையில் மின்சார ரெயில் சேவையை நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். எனவே, பயணிகளின் வசதியை மேம்படுத்தும் வகையில் ரெயில் நிலையம் மறுசீரமைப்பு, தண்டவாளம் பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் ரெயில்வே நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுபோன்ற நேரங்களில் ரெயில்கள் தாமதமாகவும், பகுதி நேர ரத்தும் செய்யப்படுகின்றன.

அந்தவகையில், தற்போது அரக்கோணம் பணிமனையில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் மின்சார ரெயில்கள் ரத்தும், சில எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரெயில் பகுதிநேர ரத்தும் செய்யப்பட்டுள்ளன. இந்த பணி காரணமாக ஆங்காங்கே மின்சார ரெயில்கள் நிறுத்தப்பட்டு தாமதமாக இயக்கப்படுகின்றன.

பயணிகள் அவதி

குறிப்பாக, அரக்கோணத்தில் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் வழித்தடத்தில் சில நாட்களாக மின்சார ரெயில்கள் தாமதமாக இயக்கப்படுவதால் பயணிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று மாலையும் வெகுநேரமாக மின்சார ரெயில்கள் வராததால் சென்டிரல் ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. வெகு நேரமாக ரெயிலுக்காக பயணிகள் காத்து கிடந்தனர். மின்சார ரெயில்கள் தாமதமாக இயக்கப்படுவதால் பணிக்கு வர தாமதம் ஆவதாகவும், பணி முடிந்து வீடு திரும்பும்போதும் வெகு நேரம் ரெயிலுக்காக காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பயணிகள் வேதனை தெரிவித்தனர். இதற்கு ரெயில்வே நிர்வாகம் ஏதாவது மாற்று ஏற்பாடு செய்ய முடியுமா? என்பதே பயணிகள் பலரின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.