தமிழக செய்திகள்

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே ஜூன் 1-ந் தேதி முதல் புதிய அட்டவணையில் மின்சார ரெயில்கள் இயக்கம்

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே புதிய ரெயில்வே கால அட்டவணைப்படி, ஜூன் 1-ந் தேதி முதல் மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

சென்னை,

இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

புதிய கால அட்டவணை

சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு பிரிவில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரெயில்களின் நேரம் ஜூன் 1-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் மாற்றியமைக்கப்படுகிறது. இது தொடர்பாக, புதிய ரெயில்வே கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

வார நாட்களில்

அதன்படி, வார நாட்களில் (திங்கள் முதல் சனி வரை) சென்னை கடற்கரையில் இருந்து காலை 3.50 மணிக்கு முதல் மின்சார ரெயில் புறப்படும். இந்த ரெயில் தாம்பரத்தை காலை 4.50 மணிக்கும், செங்கல்பட்டை காலை 5.40 மணிக்கும் சென்றடையும்.

கடற்கரையில் இருந்து 2-வது ரெயில் காலை 4.10 மணிக்கு புறப்படும். இவ்வாறு காலை 6 மணி வரை 20 நிமிடத்திற்கு ஒரு ரெயில் புறப்படும்.

கடற்கரையில் இருந்து 106 ரெயில்கள்

காலை 6 மணிக்கு பிறகு 15 நிமிடத்திற்கு ஒரு ரெயிலும், காலை 7 மணிக்கு பிறகு 10 நிமிடத்திற்கு ஒரு ரெயிலும், மதியம் 12 மணிக்கு பிறகு 15 நிமிடத்திற்கு ஒரு ரெயிலும், மாலை 4 மணிக்கு பிறகு 10 நிமிடத்திற்கு ஒரு ரெயிலும், மாலை 6 மணிக்கு பிறகு 6 நிமிடத்திற்கு ஒரு ரெயிலும், இரவு 7 மணிக்கு பிறகு 10 நிமிடத்திற்கு ஒரு ரெயிலும், இரவு 8 மணிக்கு பிறகு 15 நிமிடத்திற்கு ஒரு ரெயிலும், இரவு 10 மணிக்கு பிறகு 20 நிமிடத்திற்கு ஒரு ரெயிலும் என கடற்கரையில் இருந்து 106 மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

கடற்கரையில் இருந்து கடைசி மின்சார ரெயில் இரவு 11.59 மணிக்கு புறப்படுகிறது. இந்த ரெயில் தாம்பரத்தை இரவு 12.55 மணிக்கு சென்றடையும்.

செங்கல்பட்டில் இருந்து 26 மின்சார ரெயில்கள்

இதேபோல், செங்கல்பட்டு மற்றும் தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி முதல் மின்சார ரெயில் காலை 3.55 மணிக்கு புறப்படும். அதன்பின்னர், செங்கல்பட்டில் இருந்து 30 நிமிடத்திற்கு ஒரு ரெயில் கடற்கரை நோக்கி புறப்படும். நெரிசல் மிகுந்த நேரங்களில், குறைந்த இடைவெளியில் மின்சார ரெயில்கள் இயக்கப்படும். இவ்வாறு 26 மின்சார ரெயில்கள் செங்கல்பட்டில் இருந்து கடற்கரைக்கு இயக்கப்படும்.

தாம்பரம் - ரெயில் பயண விவரம்

அதேபோல், தாம்பரத்தில் இருந்து முதல் மின்சார ரெயில் காலை 3.55 மணிக்கும், தொடர்ந்து 20 நிமிடங்களுக்கு ஒரு மின்சார ரெயிலும் கடற்கரை நோக்கி புறப்படும். காலை 7 மணிக்கு பிறகு 10 நிமிடத்திற்கு ஒரு மின்சார ரெயிலும், காலை 8.20 மணிக்கு பிறகு 5 நிமிடத்திற்கு ஒரு மின்சார ரெயிலும், காலை 8.48-க்கு பிறகு 10 நிமிடத்திற்கு ஒரு மின்சார ரெயிலும், காலை 10 மணிக்கு பிறகு 15 நிமிடத்திற்கு ஒரு மின்சார ரெயிலும், மதியம் 12.50 மணிக்கு பிறகு 20 நிமிடங்களுக்கு ஒரு மின்சார ரெயிலும், மதியம் 2 மணிக்கு பிறகு 15 நிமிடங்களுக்கு ஒரு மின்சார ரெயிலும், மாலை 4 மணிக்கு பிறகு 8 நிமிடங்களுக்கு ஒரு மின்சார ரெயிலும், மாலை 5.55 மணிக்கு பிறகு 10 நிமிடத்திற்கு ஒரு மின்சார ரெயிலும், மாலை 7.30 மணிக்கு பிறகு 15 நிமிடத்திற்கு ஒரு மின்சார ரெயிலும் இயக்கப்பட இருக்கிறது. இவ்வாறு தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு கடைசி மின்சார ரெயில் இரவு 11.55 மணிக்கு புறப்படும். இந்த ரெயில் இரவு 12.59 மணிக்கு கடற்கரையை சென்றடையும்.

ஞாயிற்றுக்கிழமை ரெயில்கள் விவரம்

இதேபோல், ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை கடற்கரையில் இருந்து முதல் ரெயில் காலை 3.50 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் தாம்பரத்தை காலை 4.50 மணிக்கும், செங்கல்பட்டை காலை 5.40 மணிக்கும் சென்றடையும். இவ்வாறு குறிப்பிட்ட இடைவெளியில் 92 மின்சார ரெயில்கள் இயக்கப்படும்.

அதேபோல், ஞாயிற்றுக்கிழமைகளில் செங்கல்பட்டு மற்றும் தாம்பரத்தில் இருந்து முதல் மின்சார ரெயில் காலை 3.55 மணிக்கு கடற்கரை நோக்கி புறப்படும். இவ்வாறு செங்கல்பட்டில் இருந்து குறிப்பிட்ட இடைவெளியில் 47 மின்சார ரெயில்களும், தாம்பரத்தில் இருந்து 97 மின்சார ரெயில்களும் கடற்கரை நோக்கி இயக்கப்பட இருக்கின்றன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.