சென்னை,
சென்னை அம்பத்தூர், கள்ளிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஆசீர்வாதம் (வயது 38). இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கு மாதனாங்குப்பம் பிரதான சாலை, தீப்பாச்சியம்மன் நகரிலும் ஒரு வீடு உள்ளது. அந்த வீட்டிற்கான மின் கட்டணமாக ரூ.14 ஆயிரத்து 264 செலுத்த வேண்டும் என ஆசீர்வாதத்தின் தொலைபேசிக்கு குறுஞ்செய்தி வந்தது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆசீர்வாதம், புழல் மின்வாரிய அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு விசாரித்தார். அப்போது அது 'பெண்டிங்' தொகை என மின்வாரிய தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து ஆசீர்வாதம் கூறும்போது, 'ஒவ்வொரு முறையும் மின்வாரிய ஊழியர்கள் கணக்கீடு செய்து கூறும் தொகையை தவறாமல் செலுத்தி வருகிறேன். கடந்த முறை வரை ரூ.1,000-க்கும் குறைவாகவே மின்கட்டணம் செலுத்திய நிலையில், இந்த முறை திடீரென ரூ.14 ஆயிரத்து 264 செலுத்த வேண்டும் என்கிறார்கள்.
இதேபோல், எனது வீட்டின் அருகில் உள்ள மற்ற வீடுகளிலும் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரை 'பெண்டிங்' தொகை செலுத்த வேண்டும் என மின்வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர். மின்வாரிய ஊழியர்கள் முறையாக மீட்டர் கணக்கீட்டை செய்யவில்லை. திடீரென இவ்வளவு பெரிய தொகை வந்தால் நாங்கள் எங்கு செல்வது? என கேள்வி எழுப்பினார்.
இதைபோல கொளத்தூர் அடுத்த செக்ரட்டரி காலனியிலும் பல வீடுகளுக்கு வழக்கத்திற்கு மாறாக கூடுதல் மின் கட்ட ணம் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி வீட்டு உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கொளத்தூர் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.