சென்னை,
வணிக கட்டிடத்திற்கான மின்சாரத்தை 5 கிலோவாட்டில் இருந்து 49 கிலோவாட்டாக அதிகரிக்க வேண்டி விண்ணப்பித்த நபரிடம், சென்னை கிண்டியில் ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய போர்மேன் கைது செய்யப்பட்டார்.
சென்னை மாவட்டம், திரு.வி.க.நகர், கென்னடி ஸ்கொயர் மெயின்ரோடு, பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார். இவர் தனது பயன்பாட்டில் உள்ள வணிக கட்டிடத்திற்கு ஏற்கனவே பயன்படுத்திய 5 கிலோவாட் மின்சாரத்திலிருந்து 49 கிலோவாட்டாக அதிகரிக்க சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு மின் பகிர்மான கழக அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.
இந்ந நிலையில் சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு மின் பகிர்மான கழக உதவி பொறியாளர் சத்யமூர்த்தி, மேற்சொன்ன சசிகுமாருக்கு 5 கிலோவாட் மின்சாரத்திலிருந்து 49 கிலோவாட்டாக மின்சாரத்தை அதிகரிக்க தனக்கு ரூ.5 லட்சம் லஞ்சமாக கேட்டுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத சசிகுமார், இதுகுறித்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை, சென்னை பிரிவில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் இன்று (21.10.2026) வழக்குப்பதிவு செய்யப்பட்டு, பொறிவைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேற்சொன்ன பொறிவைப்பு நடவடிக்கையின் போது உதவி பொறியாளர் சத்யமூர்த்தியின் உத்தரவுப்படி, போர்மேன் (முதல் தரம்) ஜான் டி பிரிட்டோ ரூ.5 லட்சம் லஞ்சம் பணத்தை சசிகுமாரிடம் இருந்து கேட்டு பெற்றபோது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அலுவலர்களால் கைது செய்யப்பட்டார்.