சென்னை,
எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி. டி. ஆர். நிர்மல் குமார் தலைமையில் மின்வாரியத்தின் உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
இன்று (02.07.2026) சென்னை மின்வாரியத் தலைமை அலுவலகத்தில், தமிழ்நாடு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி. டி. ஆர். நிர்மல் குமார் தலைமையில் உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாநிலத்தின் மின் உற்பத்தி, மின் கொள்முதல், மின் விநியோகம், சிறப்புக் குழுக்களின் செயல்பாடுகள், கூடுதல் பணியாளர்கள் தேர்வு மற்றும் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
குறிப்பாக, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஐந்து புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மண்டலங்களின் செயல்பாடுகள், அவற்றிற்கான பணியாளர் நியமனம் மற்றும் நவீனமயமாக்கலின் நோக்கங்களை விரைவாக நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் விரிவாக ஆய்வு செய்து தேவையான அறிவுரைகளை வழங்கினார்.
மேலும், உடன்குடி அனல்மின் நிலையத்தின் முதல் அலகின் வணிக இயக்க அறிவிப்பு (Commercial Operation Declaration), இரண்டாம் அலகின் பணிகள், எதிர்கால விரிவாக்கத் திட்டங்கள் மற்றும் எண்ணூர் சிறப்புப் பொருளாதார மண்டல (SEZ) அனல்மின் திட்டத்தின் முன்னேற்றம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
மின்நுகர்வோர் குறைதீர் அமைப்பை நவீனமயமாக்குதல், சமூக ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் புகார்களை விரைவாகக் கையாளுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளும் ஆய்வு செய்யப்பட்டன.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய் மாநிலம் முழுவதும் ரூ.15,032 கோடி மதிப்பீட்டில் 231 புதிய துணை மின் நிலையங்களை அமைக்க உத்தரவிட்டுள்ள நிலையில், அவற்றின் செயலாக்க முன்னேற்றம், மின் விநியோகக் கட்டமைப்பை வலுப்படுத்துதல், மின் சுமையை சமநிலைப்படுத்துதல் மற்றும் உள்ளூர் மின் தடைகளை குறைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
மின் பராமரிப்பு மற்றும் திட்டப் பணிகளுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் கொள்முதல் முன்னேற்றம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டதுடன், கேபிள் பழுதுகள் ஏற்பட்டவுடன் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று விரைவாக மின் விநியோகத்தை சீரமைப்பதற்காக சிறப்புக் குழுக்களை (Special Teams) அமைத்து செயல்படுத்த அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.
மேலும், பிற மாநில மின் நிறுவனங்களைப் போல ஒருங்கிணைந்த சூரிய மின் கொள்கையை (Integrated Solar Policy) அறிமுகப்படுத்தி, மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் (Battery Energy Storage Systems - BESS) உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில், கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் தமிழ்நாடு மின்வாரியத் தலைவர் ஜெ. ராதாகிருஷ்ணன், எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளர் அனில் மேஷ்ராம், தமிழ்நாடு பசுமை எரிசக்திக் கழக மேலாண்மை இயக்குநர் பி.என். ஸ்ரீதர், தமிழ்நாடு மின் பகிர்மானம் மற்றும் மின்தொடரமைப்புக் கழகங்களின் இணை மேலாண்மை இயக்குநர் (நிதி) ஐ.சா. மெர்சி ரம்யா, அனைத்து இயக்குநர்கள் மற்றும் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.