தமிழக செய்திகள்

மின்வாரிய அதிகாரிகள் நாளை முதல் தலைமையகத்தில் ஆஜராக வேண்டும் - மின்சார வாரியம் உத்தரவு

அவசர சூழ்நிலைகளை தவிர, வாரிய பணியாளர்களுக்கு விடுப்பு வழங்கப்படாது என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

சென்னை,

மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் காரணமாக பொது மக்களுக்கான மின்சார விநியோகத்தில் பாதிப்பு ஏற்படக்கூடாது என்ற நோக்கில், மின்வாரிய ஊழியர்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

அனைத்து கண்காணிப்பு பொறியாளர்கள், செயல் பொறியாளர்கள் நாளை முதல் அந்தந்த தலைமையக அலுவலகங்களில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அவசர சூழ்நிலைகளை தவிர, வாரிய பணியாளர்களுக்கு விடுப்பு வழங்கப்படாது எனவும், ஏற்கனவே விடுப்பில் சென்ற ஊழியர்கள் உடனடியாக பணிகளுக்கு திரும்ப வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தடையற்ற, தொடர்ச்சியான மின் உற்பத்தியை உறுதி செய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் எனவும், மின்சார வாரியத்தின் பிரதான நுழைவாயிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, கண்காணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஒப்பந்த தொழிலாளர்கள் ஆலை வளாகத்தில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வாரிய பணியாளர்கள் அனைவரும் ஆலையை 24 மணி நேரமும் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.