திருப்பூர்,
திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உடுமலை, பொள்ளாச்சி, அமராவதி, வால்பாறை, உலாந்தி, மானாம்பள்ளி உள்ளிட்ட வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, கடமான், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
தற்போது கோடை வெயில் கொளுத்தி வருவதால், தண்ணீர் மற்றும் இரை தேடி வனவிலங்குகள் அடிக்கடி வனப்பகுதியை விட்டு வெளியேறி வருகின்றன. இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை பொள்ளாச்சியை அடுத்த சர்க்கார்பதி அருகே காண்டூர் கால்வாய்க்கு தண்ணீர் குடிக்க வந்த ஆண் யானை ஒன்று எதிர்பாராத விதமாக கால்வாய்க்குள் தவறி விழுந்தது.
கால்வாயில் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால், யானையால் மேலே ஏற முடியாமல் தத்தளித்தது. தொடர்ந்து நீரில் அடித்துச் செல்லப்பட்ட யானை பரிதாபமாக மூழ்கி உயிரிழந்தது. பின்னர் அதன் உடல் கால்வாயில் மிதந்து வந்து உடுமலையை அடுத்த திருமூர்த்தி அணை பகுதியில் கரை ஒதுங்கியது.
இதுகுறித்து தகவலறிந்த உடுமலை வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று, பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் கயிறு கட்டி யானையின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து கால்நடை மருத்துவர் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தார்.
அப்போது, இறந்தது சுமார் 45 வயதுடைய ஆண் யானை என்பது தெரியவந்தது. மேலும், அந்த யானை கேரள மாநில வனப்பகுதியில் இருந்து வந்த “சில்லி கொம்பன்” என அழைக்கப்படும் யானை என்றும், வனப்பகுதியில் வாழும் மலைவாழ் மக்களுடன் இயல்பாக பழகி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து யானையின் உடல் திருமூர்த்தி அணை அருகே குழி தோண்டி புதைக்கப்பட்டது.
காண்டூர் கால்வாய் புதுப்பிக்கப்பட்ட பிறகு, தண்ணீர் குடிக்க வரும் வனவிலங்குகள் அடிக்கடி கால்வாயில் தவறி விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக வன ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, கால்வாய் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், அப்போதுதான் வனவிலங்குகளை உயிருடன் மீட்க முடியும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.