தேன்கனிக்கோட்டை,
தளி அருகே தேவர்பெட்டா வனப்பகுதியில் இருந்து நேற்று முன்தினம் இரவு வெளியே வந்த 5 யானைகள் தேவர் பெட்டா கிராமத்தில் விவசாய நிலங்களில் புகுந்து தக்காளி, பீன்ஸ், முட்டைகோஸ், சாமந்தி உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தின.
இதுகுறித்து கிராம மக்கள் தளி வனத்துறைக்கு தகவல் அளித்தனர். அந்த யானைகளை நேற்று காலை பட்டாசு வெடித்து வனத்துறையினர் விரட்டினர். அப்போது தேவர்பெட்டா மலை மீது யானைகள் ஏறின. அங்கும் இங்கும் சுற்றித்திரிந்த யானைகளை கண்டு பக்தர்களும், கிராம மக்களும் கூச்சலிட்டனர். அப்போது யானைகள் ஒன்றுடன் ஒன்று முண்டியடித்துக் கொண்டு சென்றன.
மலை மீதுள்ள மாதேஸ்வரன் கோவில் பட்டிக்கட்டுகள் கைப்பிடி கம்பிகளை தாண்டி சென்றன. அப்போது அவை சேதம் அடைந்தன. இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இந்த யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.