சென்னை,
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழகத்தின் தோட்டக்கலை வளமிக்க மாவட்டங்களில் முதன்மையான இடத்தைப் பெற்றுள்ள கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்கள், பல ஆண்டுகளாக மாம்பழ உற்பத்தியில் தேசிய அளவில் புகழ்பெற்று விளங்கி வருகிறது. இம்மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் அல்போன்சா, பங்கனப்பள்ளி, இமாம்பசந்த், மல்கோவா உள்ளிட்ட பல்வேறு ரக மாம்பழங்கள் தமிழ்நாட்டைத் தாண்டி இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு நன்மதிப்பைப் பெற்று வருகின்றன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் சுமார் பல ஆயிரம் ஹெக்டேர்களில் மாம்பழ சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேரடியாகவும், மறைமுகமாகவும் லட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரம் மாம்பழத் தொழிலையே சார்ந்துள்ளது. குறிப்பாக சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்களது குடும்பங்களின் பொருளாதாரத்தை முழுமையாக இந்த சாகுபடியையே நம்பி நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த ஆண்டு மாம்பழங்களுக்கு போதிய விலை கிடைக்காததாலும், சந்தைப்படுத்தல் வசதிகள் இல்லாததாலும், கொள்முதல் மையங்கள் போதிய அளவில் செயல்படாததாலும், மாம்பழ விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. பல இடங்களில் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த மாம்பழங்களை விற்பனை செய்ய முடியாமல் சாலையோரங்களில் கொட்டும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும், பல ஆண்டுகள் பராமரித்து வளர்த்த மாமரங்களை வெட்டி விறகாக விற்பனை செய்யும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.
உரங்கள், பூச்சிக்கொல்லிகள், தொழிலாளர் கூலி, நீர்ப்பாசனம், மின்சாரம் மற்றும் பராமரிப்பு செலவுகள் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், உற்பத்திச் செலவுக்குக் கூட ஈடாகாத விலை கிடைப்பதால் விவசாயிகள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளனர். பலர் வங்கிகள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களில் பெற்றுள்ள கடன்களை திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே, தமிழக அரசு உடனடியாக பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்:-
கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் அவசரகால மாம்பழ கொள்முதல் மையங்களை தொடங்க வேண்டும்.
தோட்டக்கலைத் துறை மற்றும் வேளாண்மை விற்பனைத் துறை மூலம் நேரடி கொள்முதல் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
பழச்சாறு, ஜாம், ஸ்குவாஷ், உலர் மாம்பழம் உள்ளிட்ட மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பதற்காக அரசு மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் மாம்பழங்களை நேரடியாக வாங்க வேண்டும்.
மாம்பழ விவசாயிகளுக்கு சிறப்பு நிவாரணத் தொகை மற்றும் இழப்பீடு வழங்க வேண்டும்.
மாம்பழ ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் குளிர்சாதனக் கிடங்குகள் மற்றும் பதப்படுத்தும் மையங்களை அமைக்க வேண்டும்.
தேசிய வேளாண் சந்தை (e-NAM) உள்ளிட்ட தளங்கள் மூலம் சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்த வேண்டும்.
மாம்பழ உற்பத்தியாளர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயம் என்பது வெறும் தொழில் மட்டுமல்ல; அது நாட்டின் உணவுப் பாதுகாப்பிற்கான அடித்தளமாகும். கிருஷ்ணகிரி, தருமபுரி மாம்பழ விவசாயிகள் இன்று சந்தித்து வரும் இந்த நெருக்கடியை தமிழக அரசு மனிதாபிமான அடிப்படையிலும், வேளாண் வளர்ச்சி அடிப்படையிலும் அணுகி, உடனடி மற்றும் நீண்டகால தீர்வுகளை வழங்க வேண்டும்.
மாம்பழ விவசாயிகளை காப்பது என்பது ஒரு மாவட்டத்தின் பொருளாதாரத்தை மட்டுமல்ல, தமிழகத்தின் தோட்டக்கலை மரபையும் பாதுகாப்பதாகும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.