சென்னை,
நாளை தமிழகம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
வெளிச்சந்தைகளில் வெங்காயம் அதிக விலைக்கு விற்கப்படுவதை தொடர்ந்து, அதனை கட்டுப்படுத்த ரேஷன் கடைகளில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தமிழக அரசு சார்பில் குறைவான விலைக்கு வெங்காயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கூட்டுறவுத் துறை மூலமாக ரேஷன் கடைகளில் கிலோ ரூ.35-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மதுரவாயல் ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு தரமற்ற வெங்காயம் விற்பனை செய்யப்பட்ட புகார் எழுந்தது. அந்த புகாரை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட கடையின் விற்பனையாளரை சஸ்பெண்ட் செய்து காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை இணைப் பதிவாளர் உத்தரவிட்டார்.
இந்தநிலையில், ரேஷன் கடை பணியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்து நாளை மாநிலம் தழுவிய அளவில் ரேஷன் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. நாளை காலை 9 மணி முதல் ரேஷன் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் மாநிலப் பொதுச் செயலாளர் தினேஷ்குமார், தலைவர் ராஜேந்திரன், வெளியிட்ட அறிக்கையில்,.
தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தின் இணைப்பு சங்கமான அலுவலக பணியாளர்கள் சங்கம் மகளிர் அமைப்புகள் மகளிர் சுய உதவிக் குழுக்கள் ஓய்வு பெற்ற சங்கத்தின் வழிகாட்டுதல் குழு மாற்றுத்திறனாளி பணியாளர்கள் சங்கம்
அனைத்து நிர்வாகிகளும் உடனடியாக அனைத்து பணியாளர்களிடத்தில் இந்த குறுஞ்செய்தியை கொண்டு சேர்த்து போராட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டும்.
ஒரு பணியாளருக்கு ஏற்பட்ட அநீதி… ஒட்டுமொத்தப் பணியாளர்களின் உரிமைப் போராட்டம்!
காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலைக்கு அனுப்பப்பட்ட தரமற்ற வெங்காயம் தொடர்பான பிரச்சினையில், ஒரு ரேஷன் கடைப் பணியாளர் தற்காலிகப் பணிநீக்கத்திற்கு உள்ளாகியிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.
இதுதொடர்பாக மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சரைச் சந்தித்து நியாயம் கேட்டோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டும், இதுவரை தற்காலிகப் பணிநீக்க ஆணை ரத்து செய்யப்படவில்லை.
ஒரு பணியாளரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்போது, ஒட்டுமொத்தப் பணியாளர் சமூகமும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க தயங்க வேண்டாம்.
வெங்காயம் தரமாக உள்ளதா என ஆய்வு செய்ய கமிட்டி மாவட்ட வாரியாகவும் ஐந்து கடைகளுக்கு ஒரு கண்காணிப்பு குழு ஆய்வு அலுவலர்களை ஏற்படுத்தி ஆய்வுகளை செய்ய சொன்னார்கள் எத்தனை அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை அனுப்பினார்கள்?? தரமான வெங்காயம்தான் ரேஷன் கடைக்கு அனுப்பப்பட்டது என சான்றளித்தார்களா????
தரமற்ற வெங்காயத்தை அனுப்பியது யார்? அதற்குப் பொறுப்பேற்க வேண்டியவர்கள் யார்?
வெங்காயத்தைத் தரம் பிரிக்கச் சொன்னார்கள்! தரம் பிரித்த பணியாளர் மீது நடவடிக்கை எடுப்பது என்ன நியாயம்?
வெங்காயத்தின் கொள்முதல் விலை மற்றும் விற்பனை விலையை நிர்ணயம் செய்தவர்கள் யார்? தரமற்ற வெங்காயத்தை அனுப்பியவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?
உண்மையான காரணத்தை ஆராயாமல், ஒரு பணியாளரின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பது எந்த வகையில் நியாயம்? தவறு செய்தவர் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கட்டும்! ஆனால், நியாயமின்றிப் பணியாளர் தண்டிக்கப்படுவதை ஏற்க முடியாது!
நாளை நமது ஒற்றுமையை நிரூபிப்போம்! நாளை காலை 9 மணி அளவில் தமிழகம் முழுவதும் ரேஷன்கடை பணியாளர்கள் கடையடைப்புப் போராட்டத்தில் பங்கேற்போம்.கடைகளை அடைத்துவிட்டு, அந்தந்த மாவட்ட மண்டல இணைப்பதிவாளர் அலுவலகங்களில் ஒன்றுகூடுவோம்.
நமது கோரிக்கைகளை வலியுறுத்தி, பாதிக்கப்பட்ட பணியாளருக்கு நியாயம் கிடைக்கக் குரல் கொடுப்போம்.
தற்காலிகப் பணிநீக்க ஆணையை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்துவோம். போராட்டம் தொடர்பாகத் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் மூலம் ஏற்கெனவே தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
தோழமைகளே! இது ஒரு பணியாளரின் பிரச்சினை மட்டுமல்ல. இன்று அவருக்கு ஏற்பட்ட பாதிப்பு, நாளை நம்மில் யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். இன்று நாம் அவருக்காகக் குரல் கொடுக்கவில்லை என்றால், நாளை நமக்காகக் குரல் கொடுக்க யார் வருவார்கள்? நமது ஒற்றுமையை நிரூபிக்க வேண்டிய தருணம் இது!
பதவிகளைக் கடந்து, மாவட்ட வேறுபாடுகளைக் கடந்து, அனைவரும் , ஒரே குரலாக அணிவகுப்போம்!
கடையடைப்போம். நாளை அனைவரும் தவறாமல் பங்கேற்போம். பணியாளர் ஒற்றுமையை நிலைநாட்டுவோம் பணியாளர் நலனே முதன்மை. பணியாளர்களின் உரிமையே எங்கள் இலக்கு வெற்றி நமதே என அதில் பதிவிட்டுள்ளார்.