திருவண்ணாமலை,
ரிஷப வாகனத்தின் மீது ஏறி நின்று கோபுரங்களை சுத்தம் செய்த விவகாரத்தில் கோயில் பணியாளர் அசோக் என்பவர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோவிலில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று ரிஷப வாகன வீதி உலா. திருவிழாவின் 5ம் நாள் இரவில் நடைபெறும் இந்த வாகனச் சேவையின்போது, பஞ்சமூர்த்திகள் ரிஷப வாகனங்களில் எழுந்தருளி மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள்.
இதில் அண்ணாமலையார் தங்க ரிஷப வாகனத்திலும், உண்ணாமுலையம்மன் வெள்ளி ரிஷப வாகனத்திலும் எழுந்தருளும் காட்சி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். சிவபெருமானின் வாகனமாகவும், தர்மத்தின் அடையாளமாகவும் போற்றப்படும் நந்தியின் மீது அண்ணாமலையார் எழுந்தருளி வீதி உலா வருவதைக் காண ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் திரள்வார்கள்.
இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த ரிஷப வாகனத்தின் மீது ஏறி நின்று கோயில் கோபுரங்களைச் சுத்தம் செய்த சம்பவம் திருவண்ணாமலையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் கோவில் பணியாளர் ஒருவர் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ராஜகோபுரத்தை சுத்தம் செய்ய ரிஷப வாகனத்தின் மீது ஏறிய விவகாரம் சர்ச்சையான நிலையில், பணியாளர் அசோக்கை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் பரணிதரன் உத்தரவிட்டார். மேலும், ரிஷப வாகனத்தின் மீது ஏறி சுத்தம் செய்த தீயணைப்புத் துறையினர் மன்னிப்புக் கடிதம் அளித்துள்ளார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இந்த வருடத்துக்கான கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் நிறைவு நாளான 24ம் தேதி அதிகாலையில் கோவில் கருவறை முன்பு பரணி தீபம் ஏற்றப்பட உள்ளது. அதே நாளில் மாலையில் கோவிலுக்கு பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.
இதையொட்டி கோயிலில் திருவிழாவுக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கோயிலில் உள்ள நவகோபுரங்கள் மட்டுமின்றி மற்ற பகுதிகளிலும் வண்ண மின்விளக்குகள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. இதேபோல், பஞ்சமூர்த்திகள் வீதி உலா வருவதற்கு பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கும் வர்ணம் தீட்டப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.