தமிழக செய்திகள்

ஸ்ரீபெரும்புதூர் தனியார் தொழிற்சாலையில் பிரியாணி சாப்பிட்ட ஊழியர்களுக்கு வாந்தி, மயக்கம் - மருத்துவமனையில் அனுமதி

பாதிக்கப்பட்ட ஊழியர்கள் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே பிள்ளைப்பாக்கம் சிப்காட் வளாகத்தில் கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் ஷிப்ட் அடிப்படையில் சுமார் 300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இன்றைய தினம் தொழிற்சாலையில் வழக்கம் போல் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தொழிற்சாலை நிர்வாகம் தரப்பில் ஊழியர்கள் அனைவருக்கும் இன்று மதிய உணவாக சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த உணவை சாப்பிட்ட ஊழியர்களுக்கு சிறிது நேரத்தில் வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படத் தொடங்கின.

சுமார் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் தொழிற்சாலை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக பாதிக்கப்பட்ட ஊழியர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார், ஊழியர்கள் சாப்பிட்ட உணவில் நச்சுத்தன்மை இருந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் ஊழியர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டதா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT