சென்னை,
தமிழக அமைச்சர்கள் என்.ஆனந்த், முகமது பர்வேஸ் தலைமையில் சென்னை அசோக் நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தனியார் வேலை வாய்ப்பு முகாம் மூலம் மொத்தம் 3,289 பேர் பயன் பெற்றனர்.
தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் செயல்படும் சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக இன்று (22.8.2026) சென்னை அசோக் நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் நீர் வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜா.முகமது பர்வேஸ் ஆகியோர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்த முகாமில் ΚALEESWARI REFINERY PVT LTD, MRF LIMITED, ASHOK LEYLAND, BANDHAN BANK, BHARTHI AIRTEL, TAFE, MIOT INTERNATIONAL HOSPITAL, AXLES INDIA, L&T, ZF COMMERCIAL VEHICLE CONTROL SYSTEM, AXES BANK, TECH MAHINDRA FOUNDATION MFT, ROYAL ENFIELD, WHEELS INDIA LIMITED, RAMRAJ COTTON போன்ற முன்னணி நிறுவனங்கள் உள்ளிட்ட 283 தனியார் துறை வேலையளிக்கும் நிறுவனங்களும் 10 திறன் பயிற்சியளிக்கும் நிறுவனங்களும் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில் பங்கேற்றதில் 9,671 வேலைநாடுநர்கள் பதிவு செய்து பல்வேறு நிறுவனங்களின் நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டனர். இதில் 25 மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 2,973 (ஆண்கள் 1,828, பெண்கள் 1,145) வேலைநாடுநர்கள் பணிநியமனமும், முதற்கட்ட நேர்முகத் தேர்வில் 316 நபர்கள் (ஆண்கள் 190, பெண்கள் 126) தேர்ச்சி பெற்று இரண்டாம் கட்ட தேர்வுக்குமென தகுதிபெற்று மொத்தம் 3,289 நபர்கள் பயன் பெற்றனர். திறன் பயிற்சிக்காக 57 வேலைநாடுநர்களும், அயல் நாட்டு வேலைவாய்ப்பிற்காக 97 வேலைநாடுநர்களும் பதிவு செய்து பயன்பெற்றனர். மேலும் உள அளவை மதிப்பீட்டு சோதனையில் 21 நபர்கள் பயன்பெற்றுள்ளனர்.
தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் நீர் வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜா.முகமது பர்வேஸ் ஆகிய 2 அமைச்சர்களும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி விழா பேருரையாற்றினர்.
இந்த முகாமில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் அரசு செயலாளர் வீரராகவராவ், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இயக்குநர் டாக்டர் பழனி, சென்னை மாவட்ட கலெக்டர் துறைஸ்.மாலதி ஹெலன், சென்னை மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) அனிதா, சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குநர் மகேஸ்வரி மற்றும் துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.