தமிழக செய்திகள்

5 பகுதிகளில் எரிசக்தி செயல்திறன் உதவி மையங்கள்: அமைச்சர் மதன் ராஜா அறிவிப்பு

எரிசக்தியை சிக்கனமாக பயன்படுத்துவதன் மூலம், தனிநிறுவனத்தின் வளர்ச்சிக்கும் மாநிலத்தின் எரிசக்திப் பாதுகாப்புக்கும் பங்களிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் மின் பயன்பாட்டு சிக்கனத்தை ஊக்குவித்திடவும். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் மின்சார செலவினங்களை குறைத்து உற்பத்தித் திறனை மேம்படுத்தவும். ஐந்து பகுதிகளில் எரிசக்தி செயல்திறன் உதவி மையங்கள் (Energy Efficiency Facilitation Desks) அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மதன் ராஜா அறிவித்துள்ளார்.

எரிசக்தி செயல்திறன் உதவி மையங்கள்

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் தொழில் துறை. நகரமயமாக்கல், வணிக நடவடிக்கைகள் மற்றும் அதிகரித்து வரும் மின்சாரப் பயன்பாடு ஆகியவற்றின் காரணமாக மாநிலத்தின் மின்சாரத் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாநிலத்தின் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக புதிய மின்சார உற்பத்தித் திறன்களை உருவாக்குவதுடன், ஏற்கெனவே பயன்படுத்தப்படும் மின்சாரத்தைச் சிக்கனமாகவும் திறமையாகவும் பயன்படுத்துவதும் அவசியமாகிறது. குறிப்பாக, தொழில் துறையில் எரிசக்தி செயல்திறனை மேம்படுத்துவது மின்சாரத் தேவையைச் சீராக நிர்வகிப்பதற்கும், மின்சாரச் செலவினங்களைக் குறைப்பதற்கும், மாநிலத்தின் நீண்டகால எரிசக்திப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும் முக்கியமான நடவடிக்கையாகும்.

இத்தகைய சூழலில், தமிழ்நாட்டில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் (MSMEs) உற்பத்திச் செலவினங்களைக் குறைத்து, உற்பத்தித் திறனை அதிகரித்து, தொழில் நிறுவனங்களின் போட்டித்தன்மையை மேம்படுத்துவதுடன், சுற்றுச்சூழலுக்கு உகந்த நிலையான தொழில் வளர்ச்சியை உறுதி செய்யும் நோக்கில், மாவட்ட தொழில் மையங்களில் (District Industries Centres) எரிசக்தி செயல்திறன் உதவி மையங்கள் (Energy Efficiency Facilitation Desks) அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன்ராஜா தெரிவித்துள்ளார்.

மின்சாரத் தேவை

தொழில் நிறுவனங்களின் உற்பத்திச் செலவில் மின்சாரம் மற்றும் இதர எரிசக்திச் செலவுகள் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்றன. குறிப்பாக, உற்பத்தித் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் மின்மோட்டார்கள், கம்ப்ரசர்கள், கொதிகலன்கள், குளிரூட்டும் அமைப்புகள், தொழிற்சாலை விளக்குகள் மற்றும் இதர இயந்திரங்கள் அதிக அளவில் எரிசக்தியை பயன்படுத்துகின்றன. பழைய இயந்திரங்கள், முறையற்ற பராமரிப்பு, எரிசக்தி விரயம் மற்றும் நவீன எரிசக்தி சிக்கனத் தொழில்நுட்பங்கள் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாமை ஆகியவற்றால் தொழில் நிறுவனங்களின் செயல்பாட்டுச் செலவுகள் அதிகரிக்கின்றன.

மேலும், மின்சாரத் தேவை அதிகமாக இருக்கும் நேரங்களில், மின்சாரத்தைப் பயன்படுத்தும் தொழில் நிறுவனங்கள் அதிக செலவினங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம். மின்சாரச் செலவுகள் அதிகரிப்பது. குறிப்பாக, சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களின் இலாப விகிதம். செயல்பாட்டு மூலதனம் மற்றும் சந்தைப் போட்டித்தன்மையில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.இதனால், உற்பத்திப் பொருட்களின் விலையைப் போட்டித்தன்மையுடன் நிர்ணயிப்பதிலும் சவால்கள் உருவாகின்றன.

பொருளாதாரச் சுமை

எனவே, மாநிலத்தின் எரிசக்தித் தேவையை நிர்வகிப்பதிலும், தொழில் நிறுவனங்களின் பொருளாதாரச் சுமையைக் குறைப்பதிலும் எரிசக்தி செயல்திறனை மேம்படுத்துவது முக்கியமானதாகும். எரிசக்தி சேமிப்பு மூலம் தொழில் நிறுவனங்கள் தங்களது மின்சாரப் பயன்பாட்டைக் குறைப்பதுடன், மின்சாரத் தேவையின் உச்சநேர அழுத்தத்தைக் குறைப்பதற்கும் பங்களிக்க முடியும்.

இதனைக் கருத்தில் கொண்டு, முதற்கட்டமாக சென்னை, மதுரை, கோயம்புத்தூர், கடலூர் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய ஐந்து பகுதிகளில் உள்ள மாவட்ட தொழில் மைய அலுவலகங்களில் எரிசக்தி செயல்திறன் உதவி மையங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இம்மையங்களின் செயல்பாடுகளைச் சிறப்பாக ஒருங்கிணைத்து, தொழில் முனைவோர்களுக்குத் தேவையான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குவதற்காகத் தகுதியான ஆலோசனைப் பணியாளர்களை (Advisory Staff) நியமிக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இம்மையங்கள் மூலம் தொழில் நிறுவனங்களில் எரிசக்தி பயன்பாட்டை மதிப்பீடு செய்தல், எரிசக்தி தணிக்கை (Energy Audit) மேற்கொள்வதற்கான வழிகாட்டுதல், அதிக மின்சாரத்தைப் பயன்படுத்தும் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களுக்குப் பதிலாக எரிசக்தி சிக்கனமான நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கான ஆலோசனைகள் வழங்கப்படும். திறன்மிக்க மின்மோட்டார்கள். கம்ப்ரசர்கள், கொதிகலன்கள். குளிரூட்டும் அமைப்புகள் மற்றும் தொழிற்சாலை விளக்குகள் போன்றவற்றின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளும் தெரிவிக்கப்படும்.

வங்கிக் கடன் வசதிகள்

மேலும், சூரிய மின்சக்தி உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள், மின்சாரச் சுமையைச் சீராக நிர்வகிக்கும் முறைகள், எரிசக்தி சேமிப்புத் தொழில்நுட்பங்கள் மற்றும் பொருத்தமான இடங்களில் எரிசக்தி சேமிப்பு அமைப்புகளைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் தொழில் நிறுவனங்களுக்கு வழிகாட்டப்படும்.

இம்மையங்களில் நியமிக்கப்படும் ஆலோசனைப் பணியாளர்கள், தொழில் நிறுவனங்களின் எரிசக்தி பயன்பாடு தொடர்பான தேவைகளைக் கண்டறிந்து, உரிய தொழில்நுட்ப வல்லுநர்கள். எரிசக்தி தணிக்கை நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் தொடர்புடைய அரசு அமைப்புகளுடன் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவார்கள். எரிசக்தி செயல்திறனை மேம்படுத்துவதற்கான மத்திய மற்றும் மாநில அரசுத் திட்டங்கள், வங்கிக் கடன் வசதிகள் மற்றும் பொருந்தக்கூடிய ஊக்கத்தொகைகள் குறித்த தகவல்களையும் தொழில் முனைவோர்களுக்கு வழங்குவார்கள்.

குறிப்பாக, சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களால் தனியாக எரிசக்தி நிபுணர்களை நியமித்து ஆலோசனைகளைப் பெறுவது நடைமுறையில் சிரமமாக இருப்பதால், மாவட்ட தொழில் மையங்களில் அமைக்கப்படும் இம்மையங்கள் தொழில் நிறுவனங்களுக்கும் எரிசக்தி நிபுணர்களுக்கும் இடையே முக்கியமான இணைப்புப் பாலமாகச் செயல்படும். இதன் மூலம் தொழில் நிறுவனங்கள் தங்களது எரிசக்தி பயன்பாட்டைக் குறைத்து, மின்சாரச் செலவினங்களைச் சேமிப்பதுடன், உற்பத்தித் திறன் மற்றும் தயாரிப்புகளின் தரத்தையும் மேம்படுத்திக் கொள்ள முடியும்.

ஐந்து பகுதிகளில்

இம்முயற்சியின் ஒரு பகுதியாக தொழில் நிறுவனங்களுக்கான விழிப்புணர்வு முகாம்கள். பயிற்சி நிகழ்ச்சிகள் மற்றும் கருத்தரங்குகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. தொழிற்கூட்டமைப்புகள் மற்றும் தொடர்புடைய தொழில்நுட்ப தொழிற்சங்கங்கள். மின்சாரச் நிறுவனங்களுடன் இணைந்து எரிசக்தி சிக்கனத் தொழில்நுட்பங்கள், செலவினங்களைக் குறைக்கும் வழிமுறைகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த உற்பத்தி முறைகள் குறித்து தொழில் முனைவோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

முதற்கட்டமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஐந்து பகுதிகளில் இம்மையங்களின் செயல்பாடுகளைச் சிறப்பாக நடைமுறைப்படுத்தி, அதன் அனுபவங்கள் மற்றும் செயல்பாட்டு முன்னேற்றங்களின் அடிப்படையில் மாநிலத்தின் பிற மாவட்டங்களுக்கும் இம்முயற்சியை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் ஆராயப்படும்.

அமைச்சர் அவர்கள் தெரிவிக்கையில், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும், வேலைவாய்ப்பு உருவாக்கத்திலும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மிக முக்கியமான பங்காற்றி வருகின்றன. மாநிலத்தின் மின்சாரத் தேவை அதிகரித்து வரும் சூழலில், எரிசக்தியைத் திறமையாகப் பயன்படுத்துவது தொழில் நிறுவனங்களின் பொருளாதார வளர்ச்சிக்கும், மாநிலத்தின் எரிசக்தி மேலாண்மைக்கும் இன்றியமையாததாகும்.

சிக்கன நடவடிக்கை

குறிப்பாக, மின்சாரச் செலவினங்களைக் குறைப்பதன் மூலம் சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களின் செயல்பாட்டு மூலதனத்தைப் பாதுகாக்கவும். உற்பத்திப் பொருட்களின் உற்பத்திச் செலவைக் குறைக்கவும். சந்தையில் போட்டியிடும் திறனை அதிகரிக்கவும் முடியும். மேலும், எரிசக்தி சிக்கனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பயன்பாட்டை ஊக்குவிக்கவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்தவும் முடியும்.

தொழில் நிறுவனங்கள் எரிசக்தி செயல்திறனை மேம்படுத்துவது என்பது வெறும் மின்சாரச் செலவினத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கை மட்டுமல்ல; அது தொழில் நிறுவனங்களின் உற்பத்தித் திறன், இலாபத்தன்மை, சந்தைப் போட்டித்தன்மை மற்றும் நீண்டகால நிலையான வளர்ச்சியை உறுதி செய்யும் முக்கியமான முதலீடாகும்.

எனவே, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களும் மாவட்ட தொழில் மையங்களில் அமைக்கப்பட உள்ள எரிசக்தி செயல்திறன் உதவி மையங்களின் சேவைகளைப் பயன்படுத்தி. தங்களது தொழிற்சாலைகளில் எரிசக்தி பயன்பாட்டை மதிப்பீடு செய்து, தேவையான எரிசக்தி சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வர வேண்டும். தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிற் கூட்டமைப்புகளும் தங்களது உறுப்பினர் நிறுவனங்களிடையே எரிசக்தி செயல்திறன் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, இம்முயற்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மாண்புமிகு அமைச்சர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் மின்சாரத் தேவையைச் சமாளிப்பதிலும். MSME நிறுவனங்களின் உற்பத்திச் செலவுகளைக் குறைப்பதிலும், எரிசக்தி சேமிப்பு மற்றும் செயல்திறன் மேம்பாடு முக்கியப் பங்கு வகிக்கும். ஒவ்வொரு தொழில் நிறுவனமும் எரிசக்தியைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் பழக்கத்தைப் பின்பற்றுவதன் மூலம், தனிநிறுவனத்தின் வளர்ச்சிக்கும் மாநிலத்தின் எரிசக்திப் பாதுகாப்புக்கும் பங்களிக்க முடியும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT