சென்னை,
ஈரோடு, நாமக்கல், மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மின் பகிர்மான வட்டங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் 46 மின் திருட்டுகள் மற்றும் 10 மின் விதிமீறல்கள் கண்டுபிடிப்பு. மேலும் இழப்பீட்டு தொகையாக ரூ.70.39 இலட்சம் வசூல்.
01.05.2026 முதல் 15.05.2026 வரை தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் கோவை, திருச்சி ஆகிய அமலாக்க கோட்டங்களுக்குட்பட்ட கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, தர்மபுரி, தஞ்சாவூர், வேலூர், மற்றும் விழுப்புரம் அமலாக்க உபகோட்ட அதிகாரிகள் குழு ஈரோடு, நாமக்கல், மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் அதிரடி கூட்டு ஆய்வு மேற்கொண்ட போது 46 மின்திருட்டுகள் மற்றும் 10 விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
கோயம்புத்தூர் கோட்ட அமலாக்க பிரிவின் மூலமாக மேற்கொண்ட ஆய்வில் கூடுதல் இழப்பீட்டு தொகையாக ரூ.27,93,401/- (ரூபாய் இருபத்து ஏழு லட்சத்து தொண்ணூற்று மூன்றாயிரத்து நானூற்று ஒன்று மட்டும்) மின்நுகர்வோர்களுக்கு விதிக்கப்பட்டது. அதே போல் திருச்சி அமலாக்க பிரிவின் மூலமாக மேற்கொண்ட ஆய்வில் கூடுதல் இழப்பீட்டு தொகையாக ரூ.42,45,368/- (ரூபாய் நாற்பத்து இரண்டு லட்சத்து நாற்பத்து ஐந்தாயிரத்து முன்னூற்று அறுபத்து எட்டு மட்டும்) என ஆக மொத்தம் ரூ.70,38,769/- (ரூபாய் எழுபது லட்சத்து முப்பத்து எட்டாயிரத்து எழுநூற்று அறுபத்து ஒன்பது மட்டும்) அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் சம்பந்தப்பட்ட மின்நுகர்வோர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு குற்றவியல் நடவடிக்கையை தவிர்க்க முன்வந்து அதற்குரிய சமரச தொகையாக ரூ.3,25,000/-(ரூபாய் மூன்று லட்சத்து இருபத்தைந்தாயிரம் மட்டும்) செலுத்தியதால் அவர்கள் மீது காவல் நிலையத்தில் குற்றவியல் புகார் ஏதும் பதிவு செய்யப்படவில்லை.
மின் திருட்டு தொடர்பான தகவல்களை செயற்பொறியாளர்/ அமலாக்கம்/ கோவை அமலாக்கக் கோட்டப் பிரிவு 9443049456 மற்றும் திருச்சி அமலாக்கக் கோட்டப் பிரிவு 9443329851 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.