தஞ்சாவூர்,
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியை சேர்ந்த ஒருவர் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவருடைய செல்போனுக்கு டெலிகிராம் செயலி வாயிலாக ஒரு லிங்க் வந்துள்ளது. அந்த என்ஜினீயரை ஒரு பெண் தொடர்பு கொண்டு தன்னை ராஷ்மிகா சர்மா என்று அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். அப்போது அவர் ஆன்லைன் வர்த்தகத்தில் பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
பின்னர் இதற்காக பதிவு செய்து கொள்ள டெலிகிராமில் ஒரு போலியான லிங்கையும் அனுப்பி உள்ளார். அதிக லாபம் கிடைக்கும் என்று அவர் கூறியதை நம்பி என்ஜினீயர் கடந்த 15.11.2025 முதல் 20.11.2025 வரை 31 ஆன்லைன் பரிவர்த்தனைகள் மூலம் ரூ.9 லட்சத்து 63 ஆயிரம் அனுப்பியுள்ளார். இதில் ஒருமுறை மட்டும் லாபம் என்று என்ஜினீயருக்கு ரூ.8 ஆயிரத்து 860 மட்டும் அனுப்பி வைத்துள்ளனர்.
அதன்பின்னர் பல நாட்கள் கடந்த நிலையில் எவ்வித லாபத் தொகையும் வரவில்லை. இதுகுறித்து என்ஜினீயர் அந்த டெலிகிராம் லிங்கில் தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். ஆனால் எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. இதையடுத்து ரூ.9 லட்சத்து 54 ஆயிரத்தை தன்னிடம் இருந்து மோசடி செய்து விட்டனர் என்பதை என்ஜினீயர் உணர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் தஞ்சை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
என்ஜினீயர், பணம் அனுப்பிய வங்கி கணக்குகள் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவை என்பது தெரிய வந்தது. தொடர்ந்து அந்த வங்கிகளுக்கு தஞ்சை சைபர் கிரைம் போலீசார் மெயில் அனுப்பி விசாரித்ததில் சம்பந்தப்பட்ட வங்கி கணக்கில் பணம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.