தமிழக செய்திகள்

மின்சாரம் தாக்கி என்ஜினீயர் சாவு

பென்னாத்தூர் அருகே மின்சாரம் தாக்கி என்ஜினீயர் உயிரிழந்தார். அவரை காப்பாற்ற சென்ற தாய் காயமடைந்தார்.

வேலூர் மாவட்டம் பென்னாத்தூர் அருகே அல்லிவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சேட்டு (வயது 50), விவசாயி. இவரது மனைவி செந்தாமரை (43). இவர்களின் மகன்கள் அஜித்குமார் (24), விஜயகுமார் (22). இவர்களில் அஜித்குமார் ராணுவத்தில் வேலை செய்து வருகிறார். விஜயகுமார் என்ஜினீயரிங் முடித்துவிட்டு வேலை தேடி வந்தார்.

அஜித்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் வீட்டுக்கு வந்தார். விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பி செல்ல தயாரானார்.

இந்த நிலையில் அவரது தம்பி விஜயகுமார் மாட்டு கொட்டகையில் இருந்த மாட்டு சாணத்தை நிலத்திற்கு எடுத்துச் சென்றார். அப்போது அங்கிருந்து மின்கம்பத்திற்கு உதவியாக பொருத்தப்பட்டிருந்த ஸ்டே கம்பியை பிடித்தார். அப்பாது திடீரென மின்சாரம் பாய்ந்ததால் விஜயகுமார் துடித்தார். இதனைப் பார்த்த செந்தாமரை ஓடி சென்று, மகனைக் காப்பாற்ற கீழே தள்ளிவிட்டார். அப்போது செந்தாமரை மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் படுகாயம் அடைந்த 2 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே விஜயகுமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். செந்தாமரை தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து வேலூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT