தமிழக செய்திகள்

நாகர்கோவில் அருகே என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

சமீபகாலமாக யார் மீதும் நம்பிக்கை இல்லை, எல்லோரும் ஏமாற்றுகிறார்கள் என பிரத்திவ் புலம்பி வந்தாராம்.

நாகர்கோவில்,

காப்புக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜன் (வயது 58). இவருடைய மனைவி ஹேமா. இவர்களுடைய மகன் பிரத்திவ் (20). தற்போது முளகுமூடு அருகே உள்ள வெள்ளிக்கோட்டில் குடும்பத்தினருடன் ராஜன் வசித்தார். அவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்தார். மகன் பிரத்திவ் (20), என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்தநிலையில் சமீபகாலமாக யார் மீதும் நம்பிக்கை இல்லை, எல்லோரும் ஏமாற்றுகிறார்கள் என பிரத்திவ் புலம்பி வந்தாராம். இதனை அறிந்த பெற்றோர், மகனை சமாதானப்படுத்தி ஆறுதலாக பேசி வந்துள்ளனர்.

தூக்குப்போட்டு தற்கொலை

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பிரத்திவ், தாயார் ஹேமாவின் சேலையை எடுத்துக் கொண்டு மாடிக்கு சென்றுள்ளார். பின்னர் ராஜனும், ஹேமாவும் சிறிது நேரத்தில் மாடிக்கு சென்றனர். அங்கு சேலை மூலம் தூக்கில் தொங்கிய நிலையில் பிரத்திவ் உயிருக்காக போராடினார். இதனை பார்த்து துடிதுடித்து போன பெற்றோர், அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக சுவாமியார்மடத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். மேலும் இதுகுறித்து திருவட்டார் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கிறிஸ்டோபர் வழக்குப்பதிவு செய்து மாணவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார். என்ஜினீயரிங் மாணவர் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.