செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் அருகே அனுமந்தபுரம் கிராமத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் உள்ளது. இந்த பயிற்சி தளத்தில் மத்திய, மாநில போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர், தேசிய பாதுகாப்பு படையினர் உள்பட பல்வேறு பிரிவுகளை சேர்ந்த பாதுகாப்பு வீரர்கள்
அடிக்கடி துப்பாக்கி சுடுதல், ராக்கெட் லாஞ்சர் பயிற்சி மற்றும் வெடிகுண்டு வீசும் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் வெடித்தும் வெடிக்காமல் சிதறி கிடக்கும் கையெறி குண்டுகள், ராக்கெட் லாஞ்சர்கள் அனுமந்தபுரம் வனப்பகுதியில் கிடப்பது வழக்கம்.
இந்தநிலையில் பொத்தேரியில் உள்ள பல்கலைக்கழகத்தில் 4-ம் ஆண்டு என்ஜினீயரிங் படிக்கும் மாணவர்கள் பெங்களூருவை சேர்ந்த ஹீமான்யூ யாதவ் (வயது 21), ஐதராபாத்தை சேர்ந்த விஷால் (21), உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஆர்யன் சர்மா (21), ஜம்முவை சேர்ந்த கிருஷ்ணா (21), டெல்லியை சேர்ந்த நிக்காஷ் (21), வீராட் (23) ஆகிய 6 பேரும் நேற்று அனுமந்தபுரத்தில் உள்ள மலை பகுதிக்கு 3 மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
மலை உச்சிக்கு சென்ற நிலையில் அங்கு வெடிக்காமல் கிடந்த ராக்கெட் லாஞ்சரை ஒரு மாணவர் எட்டி உதைத்ததாக தெரிகிறது. அப்போது அது அருகில் இருந்த பாறையில்பட்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் பலத்த காயம் அடைந்த ஹீமான்யூ யாதவ் என்ற மாணவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். விஷால், ஆர்யன் ஷர்மா, கிருஷ்ணா, நிக்காஷ் ஆகிய 4 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.
இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த சிங்கப்பெருமாள் கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயம் அடைந்த 4 மாணவர்களையும் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
மாணவன் எட்டி உடைத்தது ராக்கெட் லாஞ்சரா? அல்லது வெடி குண்டா? என்பது குறித்து வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்த பிறகு தான் தெரியவரும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சிங்கப்பெருமாள் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவர்கள் எதற்காக மோட்டார் சைக்கிளில் மலை உச்சிக்கு சென்றார்கள் என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் செங்கல்பட்டு மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.