தமிழக செய்திகள்

நிச்சயம் செய்துவிட்டு திருமணத்துக்கு மறுத்ததால் ஆத்திரம்: நர்சிங் மாணவிக்கு வெட்டு; தடுக்க வந்த தாய் கொலை

நிச்சயம் செய்துவிட்டு திருமணத்துக்கு மறுத்ததால் ஆத்திரம் அடைந்த மணமகன், வீடு புகுந்து நர்சிங் மாணவியை அரிவாளால் வெட்டினார்.

விருதுநகர்,

நிச்சயதார்த்தம்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகா கல்குறிச்சியை சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் மதுரையில் சலூன் கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி விநாயக ஜோதி (45 வயது). இவர்களுடைய மகள்கள் வர்ஷா (21 வயது), வைஷ்ணவி (19 வயது). இவர்கள் இருவரும் மதுரையில் உள்ள ஒரு கல்லூரியில் நர்சிங் படித்து வந்தனர்.

முத்துக்குமாரின் அக்கா பாசவலை என்பவருடைய மகன் யுவராஜா (35 வயது). மதுரையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் முத்துக்குமாரின் மகள் வர்ஷாவுக்கும், யுவராஜாவுக்கும் 2 மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிலையில் திடீரென யுவராஜாவை திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்று வர்ஷா கூறியதாக தெரிய வருகிறது.

அரிவாள் வெட்டு

நேற்று காலை காலை 8 மணியளவில் வர்ஷா மட்டும் வீட்டில் துணி துவைத்து கொண்டு இருந்தார். அப்போது, யுவராஜா வீட்டுக்குள் புகுந்தார். திருமணம் செய்ய மறுத்த ஆத்திரத்தில் வர்ஷாவிடம் பேசியதுடன், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த வர்ஷா அலறினார். அந்த நேரத்தில், வீட்டுக்குள் இருந்த அவருடைய தாய் விநாயக ஜோதி மகள் வெட்டப்படுவதை பார்த்து தடுக்க முயன்றார்.

தாய் உயிரிழப்பு

உடனே யுவராஜா, இந்த பிரச்சினைக்கு எல்லாம் நீதான் காரணம்? எனக்கூறி விநாயக ஜோதியையும் அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விநாயக ஜோதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்கு போராடிய வர்ஷாவை மீட்டு சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதற்கிடையே யுவராஜா, அரிவாளுடன் மல்லாங்கிணறு போலீஸ் நிலையத்துக்கு சென்று சரண் அடைந்தார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.