தமிழக செய்திகள்

அரசு பள்ளிகளில் தரமான கல்வியையும், பாதுகாப்பையும் உறுதி செய்யுங்கள்! - நயினார் நாகேந்திரன்

அமைச்சர் கீர்த்தனாவின் “ஆய்வு” சரி தான் என்று கூறி வக்காலத்து வாங்கி கொண்டிருக்கிறீர்கள் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

சென்னை,

அரசுப் பள்ளிகளில் தரமான கல்வியையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்" என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

அரசுப்பள்ளிகளை கவனியுங்கள்

அமைச்சருக்கு அப்புறம் ஆதரவு கரம் நீட்டலாம், முதலில் அரசுப்பள்ளிகளை கவனியுங்கள் அமைச்சர் ராஜ்மோகன்! வகுப்புகள் துவங்கி ஒரு மாதம் கடந்த பிறகும் கூட, தமிழக அரசுப் பள்ளிகளில் படிக்கும் பெரும்பாலான 4&5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப் புத்தகங்களும், இடைநிலை மாணவர்களுக்கு பயிற்சி ஏடுகளும், 1 முதல் 3 ஆம் வகுப்புகள் எடுக்கும் ஆசிரியர்களுக்கு “ஆசிரியர் கையேடு”களும் இன்னும் முறையாக வழங்கப்படவில்லை என்று வெளியாகியுள்ள செய்திகள் கல்வி வட்டாரத்தில் பெரும் சலசலப்பையும், பெற்றோர் மத்தியில் கடும் அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளன.

வக்காலத்து

கோடைக்காலம் முடிந்து சரியாக பள்ளிகள் திறக்கப்படும் வேளையில் பள்ளி கல்வி துறை அமைச்சராக பொறுப்பேற்ற நீங்கள், அனைத்து அரசு பள்ளிகளிலும் தேவைக்கேற்ப ஆசிரியர்கள் இருக்கின்றனரா, பாடப்புத்தகங்கள் முழுவதுமாக பிள்ளைகளுக்கு கிடைக்க பெற்றனவா, பள்ளிகளில் தரமான வகுப்பறைகள், சுத்தமான குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் உள்ளனவா என்பதை தானே முதலில் ஆய்வு செய்து உறுதிபடுத்தியிருக்க வேண்டும்? ஆனால், நீங்களோ அரசு பள்ளி மாணவிக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்பதை அதிகார தொனியில் குத்தி காட்டிய அமைச்சர் கீர்த்தனாவின் So called “ஆய்வு” சரி தான் என்று கூறி வக்காலத்து வாங்கி கொண்டிருக்கிறீர்கள்.

தரமான கல்வி

ஆக சிறந்த கல்வித்துறை உங்களை நம்பி ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. எங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் உங்கள் செயல்பாடுகளை மட்டுமே சார்ந்துள்ளது. எனவே, உங்கள் பொறுப்புணர்ந்து செயல்படுங்கள் அமைச்சர் ராஜ்மோகன் அரசு பள்ளிகளில் தரமான கல்வியையும், பிள்ளைகளின் பாதுகாப்பையும் உறுதி செய்யுங்கள்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.