கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தரமான மருத்துவக் கருவிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் - வானதி சீனிவாசன்

அரசு மருத்துவமனைகளின் தரம் உயர்த்துவதற்கான நிதியை தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்திற்கு செலவழித்து என்ன பயன்? என்று வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை,

உயிர்காக்கும் தரமான மருத்துவக் கருவிகள் அனைத்து அரசு தலைமை மருத்துவமனைகளிலும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை, நோய் கண்டறிந்து உயிர்காக்கும் கருவி வசதி இல்லாததால் உயிரிழந்ததாகக்  கூறப்படும் செய்தி மிகுந்த வேதனையும், அதிர்ச்சியையும் உண்டாக்குகிறது. தமிழக அரசு மருத்துவமனைகளில் எத்தனை நாளுக்குத்தான் இதுபோன்ற அவலங்கள் தொடரும் என்று தெரியவில்லை.

பச்சிளங்குழந்தைகள், நோயாளிகளின் உயிர்காக்கும் கருவிகள், அரசு மருத்துவமனைகளின் தரம் உயர்த்துவதற்கான நிதியை தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்திற்கு செலவழித்து என்ன பயன் முதல்-அமைச்சர் அவர்களே?

தமிழகக் குழந்தைகளின் தாய்மாமன் என்று வெற்று விளம்பரம் செய்யும் இந்த ரீல்ஸ் மாடல் தவெக அரசுக்கு இதுபோன்ற செய்திகள் மனதை உறுத்தவில்லையா? சரியாகக் கண்விழித்து இந்த உலகைக் காண்பதற்குள் உயிர்காக்கும் கருவிகள் இல்லாததால் இந்த உலகைவிட்டே போயிருக்கும் அக்குழந்தையின் குடும்பத்தினருக்கு இந்த அரசு என்ன பதில் வைத்திருக்கிறது?

தங்க மோதிரம் திட்டத்தினை பிறகு பார்த்துக் கொள்ளலாம். முதலில் உயிர்காக்கும் தரமான மருத்துவக் கருவிகள் அனைத்து அரசு தலைமை மருத்துவமனைகளிலும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT