கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

அரசு மருத்துவமனைகளில் தரமான மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் - நயினார் நாகேந்திரன்

தமிழகத்தின் சுகாதாரத்துறை சீரழிந்து கிடக்கிறது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை வழங்கப்படாததால் விபத்தில் காயமடைந்த பரமேஸ்வரன் என்பவர் உயிரிழந்து விட்டதாகவும், கோபிச்செட்டிபாளையம் அருகே குழந்தைகள் நல மையத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்ட 10 மாத ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்து விட்டதாகவும், தேனி பெரியபாளையம் அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையின் காரணமாக 14 வயது சிறுவன் கோமா நிலைக்கு சென்று விட்டதாகவும் வெளியாகியுள்ள செய்திகளை பார்க்கையில், தமிழகத்தின் சுகாதாரத்துறை எந்தளவிற்கு சீரழிந்து கிடக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகக் தெரிகிறது.

பதவியேற்ற புதிதில், “அரசு அமைச்சர்கள் எல்லாம் அரசு மருத்துவமனைகளில் தான் சிகிச்சை பெறுவோம்” என்று வசனம் பேசிய, சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ், படத்திற்கு போவது போலவும், பைக்கில் செல்வது போலவும் விதவிதமாக ரீல்ஸ்கள் எடுப்பதில்தான் தற்போது அதீத ஆர்வம் காட்டுகிறாரே தவிர, அரசு மருத்துவமனைகளின் தர மேம்பாட்டிற்காக இதுவரை ஒரு செங்கல்லைக் கூட நகர்த்தவில்லை. மொத்தத்தில் “மாற்றம்” என்று கூறி, மக்களை “ஏமாற்றி” ஆட்சிக்கு வந்த தவெக அரசு, தற்போது நிர்வாகம் தெரியாமல் திணறுகிறது என்பதுதான் உண்மை.

எனவே, ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகும் கூட, இன்னும் “Reels Mode”-லேயே உலவிக் கொண்டிருக்கும் முதல்வர் விஜய்யும், அவரது அமைச்சர்களும், இனியாவது மக்களின் அடிப்படைத் தேவைகளையும், பிரச்சினைகளையும் கவனிக்க வேண்டும்! அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள், தரமான மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்து ஏழை, எளிய மக்களின் உயிர்களை பாதுகாக்க வேண்டும்! இனியும் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க வேண்டும்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT