தமிழக செய்திகள்

ஈரோடு: ஊருக்குள் சுற்றித்திரிந்த பெண் யானை உயிரிழப்பு

ஜீர்கள்ளி வனச்சரகத்தில் இருந்து கடந்து 4 நாட்களுக்கு முன் ஒரு பெண் யானை வெளியேறியது.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள ஜீர்கள்ளி வனச்சரகத்தில் இருந்து கடந்து 4 நாட்களுக்கு முன் ஒரு பெண் யானை வெளியேறியது. அந்த யானை வனப்பகுதிக்குள் செல்லாமல் தாளவாடி அருகே உள்ள மல்லன்குழி மற்றும் கரளவாடி கிராமத்தில் சுற்றித்திரிந்தது.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ஜீர்கள்ளி வனத்துறையினர் அங்கு சென்று யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் யானை காட்டுக்குள் செல்லாமல் ஊருக்குள்ளேயே வலம் வந்தது.

இந்த நிலையில் நேற்று காலை மல்லன்குழி அருகே அந்த யானை இறந்து கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ஜீர்கள்ளி வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இறந்து கிடந்த யானைக்கு சுமார் 12 வயது இருக்கும் என்றும், அது எப்படி இறந்தது என்று உடற்கூராய்வுக்கு பிறகுதான் தெரியவரும் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.