ஈரோடு,
ஈரோடு மாவட்டம் குண்டேரிப்பள்ளம் அணைப் பகுதியில், சேற்றில் சிக்கித் தவித்த பெண் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வனப்பகுதியை ஒட்டியுள்ள குண்டேரிப்பள்ளம் அணையில், வறட்சி காரணமாக நீர்மட்டம் குறைந்து காணப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நேரத்தில் தண்ணீர் குடிப்பதற்காக வந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் காட்டு யானை ஒன்று, எதிர்பாராதவிதமாக அணையின் ஆழமான சேற்றுப் பகுதியில் சிக்கிக் கொண்டது.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5:30 மணியளவில் அணைப் பகுதிக்கு வந்த பொதுமக்கள், யானை சேற்றில் இருந்து வெளிவர முடியாமல் பிளிறும் சத்தத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து உடனடியாக கோபிசெட்டிபாளையம் வனத்துறையினருக்கும், சத்தியமங்கலம் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்புக் குழுவினர், பொக்லைன் (ஜேசிபி) இயந்திரம் மற்றும் கயிறுகளின் உதவியுடன் யானையை மீட்கும் பணியில் இறங்கினர். ஆனால், யானை சிக்கியிருந்த பகுதி தளர்வான சேற்றைக் கொண்டிருந்ததால், மீட்புப் பணிக்கு வந்த பொக்லைன் இயந்திரமும் சேற்றில் சிக்கிப் போனது. இதனால் மீட்புப் பணியில் தற்காலிக தொய்வு ஏற்பட்டது.
இதையடுத்து வனத்துறையினர் உடனடியாக மாற்று ஏற்பாடாக, மற்றொரு சக்திவாய்ந்த ஹி்டாச்சி இயந்திரத்தை சம்பவ இடத்திற்கு வரவழைத்தனர். பல மணி நேர கடுமையான கூட்டுப் போராட்டத்திற்கு பிறகு, மதிய வேளையில் யானை சேற்றிலிருந்து பாதுகாப்பாக வெளியே இழுத்து மீட்கப்பட்டது.
விடிய விடிய சேற்றுக்குள் சிக்கித் தவித்ததால், மீட்கப்பட்ட பெண் யானை கடுமையான உடல் சோர்வுடன் காணப்பட்டது. இதனால் அதனால் சுயமாக எழுந்து நிற்க முடியவில்லை. சத்தியமங்கலத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட வனத்துறை கால்நடை மருத்துவக் குழுவினர், சம்பவ இடத்திலேயே யானைக்கு குளுக்கோஸ் மற்றும் அவசர கால மருந்துகளை வழங்கி தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) காலையில் யானையின் உடல்நிலை மிகவும் மோசமானதையடுத்து அது பரிதாபமாக உயிரிழந்தது.