ஈரோடு,
ஈரோடு மாவட்டம் குருமந்தூரில், பள்ளிவாசல் திறப்பு விழாவையொட்டி இந்து மக்கள் ஊர்வலமாகச் சென்று சீர்வரிசை வழங்கிய நிகழ்வு மத நல்லிணக்கத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குருமந்தூர் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பள்ளிவாசலின் திறப்பு விழா இன்று (வெள்ளிக்கிழமை) வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த இந்து மக்கள் திரளாக ஒன்றிணைந்து, தட்டுகளில் பழங்கள், இனிப்புகள் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை ஏந்தியபடி மேளதாளங்களுடன் ஊர்வலமாக பள்ளிவாசலுக்குச் சென்றனர். அங்கு அவர்களை இஸ்லாமியப் பெருமக்கள் ஆரத்தழுவி உற்சாகமாக வரவேற்றனர்.
அப்பகுதியில் மதங்களைக் கடந்த சகோதரத்துவம் பல தலைமுறைகளாகத் தொடர்ந்து வருகிறது. இதேபோல், குருமந்தூரில் உள்ள கோவில் திருவிழாக்கள் நடைபெறும்போதும், அப்பகுதியில் வசிக்கும் இஸ்லாமிய மக்கள் 'தாய்வீட்டுச் சீதனமாக' சீர்வரிசை பொருட்களைக் கொண்டு சென்று வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
ஒருவருக்கொருவர் பண்டிகை மற்றும் வழிபாட்டுத் தல நிகழ்வுகளில் பரஸ்பரம் அன்பையும் மரியாதையையும் பரிமாறிக்கொள்ளும் குருமந்தூர் கிராம மக்களின் இந்த செயல், சமூக வலைதளங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது.