ஈரோடு,
சேலம் மாவட்டம் சங்ககிரி கஸ்தூரி நகர் பகுதியை சேர்ந்தவர் அருள்ஜோதி (வயது 34). தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ரேவதி (28). இவர்களுக்கு 4 1/2வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் ரேவதி மீண்டும் கர்ப்பம் ஆனார்.
இதைத்தொடர்ந்து அவரை பிரசவத்துக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த 19-ந்தேதி மாலையில் சேர்த்தனர். நேற்று முன்தினம் காலையில் ரேவதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து தாயும், குழந்தையும் வேறு அறைக்கு மாற்றப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை குழந்தை மூச்சு-பேச்சு இல்லாமல் மயக்க நிலையில் இருந்தது. உடனே இதுகுறித்து டாக்டருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே குழந்தை உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த தகவல் கிடைத்ததும் அங்கு வந்த ஈரோடு அரசு மருத்துவமனை போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
குழந்தை உயிரிழப்புக்கான காரணம் குறித்து அரசு மருத்துவமனை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்த ஒரே நாளில் பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.