ஈரோடு,
ஈரோடு மாவட்டம், சோலார் அருகே உள்ள சின்னியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பெரோஸ்கான். இவர் கத்தார் நாட்டில் வேலை பார்த்து வருகிறார். அவருடைய மகன் பைசல் கான் (வயது 21). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி நடந்த சட்டமன்ற தேர்தலில் ஓட்டு போடுவதற்காக இவர் தனது சொந்த ஊரான சின்னியம்பாளையத்துக்கு வந்திருந்தார். அவர், நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் சாவடிப்பாளையம் அருகே உள்ள நட்டாற்றீஸ்வரர் கோவில் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார்.
முதலில் நண்பர்களுடன் ஆழம் இல்லாத பகுதியில் நின்று குளித்த பைசல் கான், பின்னர் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அவர் தண்ணீரில் மூழ்க தொடங்கினார். இதை பார்த்த நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதைத்தொடர்ந்து அங்கு குளித்து கொண்டிருந்தவர்களிடம் கூறினார்கள். உடனே அவர்கள் பைசல் கானை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.
சிறிது நேர போராட்டத்துக்கு பிறகு பைசல் கானை மயங்கிய நிலையில் மீட்டனர். அதன்பின்னர் அவரை சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு பைசல் கான் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.