ஈரோடு,
கொடுமுடி ரெயில்வே யார்டு பகுதியில் ரெயில்வே தண்டவாளம் பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால் ஈரோடு - செங்கோட்டை, திருச்சி - ஈரோடு ரெயில்கள் நாளை (சனிக்கிழமை). வருகிற 29-ந் தேதி, அடுத்த மாதம் (ஜூலை) 2-ந் தேதி ஆகிய 3 நாட்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. அதன்படி திருச்சி - ஈரோடு பாசஞ்சர் ரெயில் (வண்டி எண் 56809) காலை 7.25 மணிக்கு புறப்பட்டு கரூர் வரை இயக்கப்படுகிறது. அதாவது கரூரில் இருந்து ஈரோடு வரை ரத்து செய்யப்படுகிறது.
செங்கோட்டை - ஈரோடு (16846) எக்ஸ்பிரஸ் ரெயில் செங்கோட்டையில் இருந்து அதிகாலை 5.20 மணிக்கு புறப்பட்டு கரூர் வரை இயக்கப்படும். 3 நாட்களும் பராமரிப்பு பணிகள் முடிந்த பிறகு கரூரில் இருந்து ஈரோடு வரை அதே நிறுத்தங்களில் முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயிலாக இயக்கப்படுகிறது. இதேபோல் ஈரோடு - செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் (16845) ஈரோட்டில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக கரூரில் இருந்து மதியம் 3.05 மணிக்கு புறப்படும். ஈரோட்டில் இருந்து கரூர் வரை ரெயில் ரத்து செய்யப்படுகிறது. இந்த தகவல் சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஈரோடு - செங்கோட்டை, செங்கோட்டை - ஈரோடு ஆகிய ரெயில்கள் கடந்த ஒரு வாரமாக ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.