தமிழக செய்திகள்

ஈரோடு: 4-வது நாளாக தொடரும் டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்; மதுப்பிரியர்கள் திண்டாட்டம்

காலி மதுபாட்டில்களை திரும்ப பெற எதிர்ப்பு தெரிவித்து டாஸ்மாக் ஊழியர்கள் 4-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஈரோடு,

தமிழகத்தில் வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள், பஸ் நிலையங்களில் இருந்து 500 மீட்டர் தூரத்துக்குள் உள்ள 717 டாஸ்மாக் மதுபான கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்று முதல்-அமைச்சர் விஜய் அறிவித்தார். அதன்படி ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் உள்ள 183 டாஸ்மாக் கடைகளில் 40 கடைகள் கண்டறியப்பட்டு மூடப்பட்டன. தற்போது மாவட்டத்தில் 143 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் அனைத்து கடைகளிலும் காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி எந்த கடையில் மதுவை வாங்குகிறார்களோ அதே கடையில் காலி மது பாட்டில்களை திருப்பி கொடுத்தால் கூடுதலாக கொடுத்த ரூ.10-யை கடை ஊழியர்கள் திருப்பி கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதன் காரணமாக கூடுதல் வேலைப்பளு ஏற்படுவதாகவும், எனவே இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கை வைத்தனர்.

வேலைநிறுத்த போராட்டம்

இவர்களுடைய கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால், ஈரோடு மாவட்டத்தில் கடந்த 25-ந்தேதி முதல் டாஸ்மாக் ஊழியர்கள் கடையை திறக்காமல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த போராட்டம் இன்று 4-வது நாளாக நீடிக்கிறது. இதற்கிடையில் ஈரோடு அருகே சூரியம்பாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தை டாஸ்மாக் ஊழியர்கள் நேற்று முற்றுகையிட்டனர். அவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

அதாவது, கோர்ட்டு உத்தரவின்படி கண்டிப்பாக காலி மதுபாட்டில்களை வாங்க வேண்டும் என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் டாஸ்மாக் ஊழியர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மதுப்பிரியர்கள் திண்டாட்டம்

இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர்கள் கூறும்போது, 'ஈரோடு மாவட்டத்தில் அரசு உத்தரவுபடி 40 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன. இதனால் மற்ற கடைகளில் கூட்டம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக காலி மது பாட்டில்களை வாங்குவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். எங்களுடைய கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்' என்றனர்.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளதால் மதுவாங்க முடியாமல் மதுப்பிரியர்கள் திண்டாட்டம் அடைந்துள்ளனர். இதற்கிடையில் உயர்ரக பாருடன் கூடிய தனியார் மதுக்கடைகளை நோக்கி மதுப்பிரியர்கள் படையெடுக்க தொடங்கி உள்ளனர். இதனால் அந்த கடைகளில் வழக்கத்தைவிட கூட்டம் அலைமோதுகிறது.