ஈரோடு,
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலை அடிவாரத்தில் வரட்டுப்பள்ளம் அணை அமைந்துள்ளது. 33.46 அடி நீர்மட்டம் உயரம் கொண்ட இந்த அணைக்கு பர்கூர் மலைப்பகுதியே நீர்ப்பிடிப்பு பகுதியாக உள்ளது. வரட்டுப்பள்ளம் அணை நிரம்பும்போது அதன் உபரி தண்ணீர் கெட்டி சமுத்திரம் ஏரி, அந் தியூர் பெரிய ஏரி, சந்தியபாளையம் ஏரி, வேம்பத்தி ஏரி, ஆப்பக்கூடல் ஏரிக்கு செல்லும். இதன் மூலம் ஏராளமான விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் நிலத்தடி நீர்மட்டம் உயர காரணமாக அமைந்துள்ளது.
இது தவிர வரட்டுப்பள்ளம் வனப்பகுதியில் உள்ள விலங்குகளும் வரட்டுப்பள்ளம் அணைப்பகுதிக்கு வந்தே தண்ணீர் குடித்து செல்லும். இந்தநிலையில் இந்த ஆண்டு பர்கூர் மலைப்பகுதியில் மழை பெய்யவில்லை. இதனால் வரட்டுப்பள்ளம் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. 33.46அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 14.96 அடியே உள்ளது. பருவமழை பெய்யுமா? வரட்டுப்பள்ளம் அணைக்கு தண்ணீர் வருமா? என்று விவசாயிகள் ஏக்கத்தில் உள்ளனர்.