ஈரோடு,
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கடம்பூர் மலைப்பகுதியில் யானை தாக்கியதில் கூலித்தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள இருட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த பசுவராஜ் மற்றும் சிவகுமார் ஆகியோர் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது கடம்பூர் - இருட்டிபாளையம் சாலையில் 12-வது மைல் பகுதியில் சாலையின் நடுவே யானை நின்றிருந்தது.
இதனால் இருவரும் வாகனத்தை சாலையோர பள்ளத்தில் இறக்கிவிட்டு தப்பிக்க முயன்றனர். அப்போது யானை பசுவராஜை துரத்தி தாக்கி தூக்கி வீசியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் வந்த சிவகுமார் அருகிலிருந்த புதரில் மறைந்து காயமின்றி தப்பினார்.
தகவலறிந்த கடம்பூர் போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று பசுவராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.