சென்னை,
அக்டோபர் மாதம் 1-ந் தேதி முதல் அனைத்து கடை பணியாளர்களும் கட்டாயமாக இ.எஸ்.ஐ. திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும்.
டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் கே.நந்தகுமார், அனைத்து மண்டல மேலாளர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
டாஸ்மாக் இயக்குனர்கள் குழுவின் 223-வது கூட்டம் கடந்த ஜூலை 6-ந்தேதி நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், சில்லறை மதுபானக்கடை பணியாளர்கள் அனைவரும் ஊழியர்கள் மாநில காப்பீட்டு சட்டம், 1948-ன் விதிகளின்படி இ.எஸ்.ஐ. திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
இதையடுத்து, தற்போது டாஸ்மாக்கிற்கு வழங்கப்பட்டுள்ள இ.எஸ்.ஐ. விலக்கு வரும் செப்டம்பர் மாதம் 30-ந்தேதியுடன் முடிவடைவதால், அக்டோபர் மாதம் 1-ந் தேதி முதல் அனைத்து கடை பணியாளர்களும் கட்டாயமாக இ.எஸ்.ஐ. திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.