தமிழக செய்திகள்

தேர்தல் விதிமுறைகளால் வெறிச்சோடிய எட்டயபுரம் ஆட்டுச்சந்தை: வர்த்தகம் குறைந்ததால் வியாபாரிகள் கவலை

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெறும் புகழ்பெற்ற எட்டயபுரம் வாராந்திர ஆட்டுச்சந்தை, இந்த ஆண்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாகப் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது.

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெறும் புகழ்பெற்ற எட்டயபுரம் வாராந்திர ஆட்டுச்சந்தை, இந்த ஆண்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாகப் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது.

தென் மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சந்தைகளில் ஒன்றான தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரம் ஆட்டுச்சந்தை, ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் நடைபெறுவது வழக்கம். சாதாரணமாகவே இங்கு வாரந்தோறும் சுமார் ரூ.2 கோடி வரை விற்பனை நடைபெறும். தீபாவளி, ரம்ஜான், பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் நடைபெறும் சிறப்புச் சந்தைகளில் இந்த வர்த்தகம் ரூ.5 கோடி முதல் ரூ.8 கோடி வரை உயரும்.

இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவதால், நேற்று நடைபெற்ற சிறப்புச் சந்தையில் வழக்கத்தை விட அதிகளவில் ஆடுகள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்தபடி வியாபாரிகளோ அல்லது ஆடுகளை வாங்குபவர்களோ அதிகளவில் வரவில்லை. இதனால் எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் எட்டயபுரம் ஆட்டுச்சந்தை நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், உரிய ஆவணங்களின்றி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ரொக்கப்பணம் கொண்டு சென்றால் பறக்கும் படையினர் பறிமுதல் செய்கின்றனர். கால்நடை வியாபாரத்தில் ஈடுபடும் அன்றாடக் கூலித் தொழிலாளர்கள் பலரிடம் முறையான ஆவணங்கள் இருப்பதில்லை. தேர்தல் கெடுபிடிகள் காரணமாகப் பிற மாவட்டங்களில் இருந்து வரும் வியாபாரிகளின் வருகை பெருமளவு குறைந்துள்ளது.

கடந்த ஆண்டு ரம்ஜான் சிறப்புச் சந்தையில் சுமார் ரூ.6 கோடி வரை ஆடுகள் விற்பனையான நிலையில், நேற்று வெறும் ரூ.40 லட்சத்திற்கு மட்டுமே வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இது குறித்துப் பேசிய வியாபாரிகள், "தேர்தல் கெடுபிடியால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது; ரம்ஜான் பண்டிகை அன்று விற்பனை சற்று அதிகரிக்கும் என நம்புகிறோம்" என்று கவலையுடன் தெரிவித்தனர்.