தமிழக செய்திகள்

தமிழகத்தில் காவல்துறை ஆய்வாளருக்கே பாதுகாப்பில்லை - நயினார் நாகேந்திரன்

சட்டம் - ஒழுங்கு அதலபாதாளத்திற்குச் சென்றுவிட்டது என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையா? என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார்.

சென்னை,

பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில், சீருடையில் உள்ள ஒரு காவல் ஆய்வாளரையே துணிச்சலாக வெட்டும் அளவுக்குக் குற்றவாளிகளுக்குத் தைரியம் எங்கிருந்து வந்தது? என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார்.

காவல் ஆய்வாளருக்கு அரிவாள் வெட்டு

இது தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பேருந்து நிலையம் அருகே, மதுபோதையில் அரிவாளுடன் பொதுமக்களை அச்சுறுத்திய நபரைப் பிடிக்க முயன்ற காவல் ஆய்வாளர் காதர் மீரா தலையில் அரிவாளால் கொடூரமாக வெட்டப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. கடமையாற்றியபோது படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காவல் ஆய்வாளர் விரைந்து பூரண குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக ஆட்சியில், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு முற்றிலும் அதலபாதாளத்திற்குச் சென்றுவிட்டது என்பதற்கு இந்தச் சம்பவமே அப்பட்டமான சான்று. பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில், சீருடையில் உள்ள ஒரு காவல் ஆய்வாளரையே துணிச்சலாக வெட்டும் அளவுக்குக் குற்றவாளிகளுக்குத் தைரியம் எங்கிருந்து வந்தது? மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல்துறைக்கே பாதுகாப்பில்லாத அவல நிலைக்குத் தமிழ்நாடு தள்ளப்பட்டுள்ளது. கட்டுப்பாடின்றிப் புழங்கும் மது மற்றும் போதைப்பொருள் கலாசாரமே இதுபோன்ற கொடூரங்களுக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

உச்சபட்ச தண்டனை தர வேண்டும்

எனவே, அரசியல் மேடைகளில் பேசும் வெற்று அறிவிப்புகளை நிறுத்திவிட்டு, முதல்-அமைச்சர் விஜய் உடனடியாகச் சட்டம் - ஒழுங்கு விவகாரத்தில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். காவல்துறையினரின் பணிகளில் தலையிடாமல், சமூக விரோதிகளையும் ரவுடிகளையும் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க அவர்களுக்கு முழுச் சுதந்திரம் வழங்க வேண்டும். துணிச்சலாகக் காவல் ஆய்வாளரையே அரிவாளால் வெட்டிய குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை பெற்றுத் தர வேண்டும் எனத் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT