மதுரை,
இசையமைப்பாளர் தேவா மறைந்தாலும் அழகரை வரவேற்கும் அவரது குரல் என்றும் மறையாது.
பிரபல திரைப்பட இசையமைப்பாளரும், பாடகருமான தேனிசைத் தென்றல் தேவா இன்று காலமானார். அவருக்கு வயது 76. இன்று காலையில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தேவா அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது உயிர் பிரிந்தது.
இசையமைப்பாளர் தேவாவின் குரலில் ஒலிக்கும் ‘வாராரு வாராரு... அழகர் வாராரு...’ பாடல், மதுரை சித்திரைத் திருவிழாவின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. கேப்டன் விஜயகாந்த் நடித்த ‘கள்ளழகர்’ திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல், ஆண்டுதோறும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வின்போது ஒலிபரப்பப்படுகிறது.
மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திரளுவார்கள். அப்போது, “வாராரு வாராரு... அழகர் வாராரு...” என்ற தேவாவின் குரல் ஒலிக்கும்போது, பக்தர்களின் உற்சாகம் கரைபுரண்டு ஓடும்.
“சாமி கண்டதும் பாதி சனங்க... சாமியேறி ஆடுதே... சாதி சனங்க கோடி சனங்க... சாதி மறந்து கூடுதே...” என்ற வரிகள், சாதி வேறுபாடுகளைக் கடந்து மக்கள் ஒன்றிணையும் உணர்வை வெளிப்படுத்துகின்றன.
ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழாவில் கள்ளழகரை வரவேற்கும் இந்தப் பாடல், தேவாவின் குரலையும் இசையையும் மதுரை மக்களின் நினைவுகளில் என்றும் நிலைத்திருக்கச் செய்கிறது. இசையமைப்பாளர் தேவா மறைந்தாலும், கள்ளழகர் வைகையில் இறங்கும் ஒவ்வொரு முறையும் அவரது குரல் பக்தர்களின் உள்ளங்களில் ஒலித்துக்கொண்டே இருக்கும். அந்த வகையில், மதுரையின் திருவிழா மரபில் தேவாவின் குரலுக்கு என்றும் தனி இடம் உண்டு.