தமிழக செய்திகள்

ஆயிரம் ஏக்கர் நிலம் இருந்தாலும் ரேஷன் அரிசி தான் சாப்பிடுகிறேன்; ஏனென்றால்... கே.என். நேரு விளக்கம்

ஏதோ நாங்கள் உற்பத்தி செய்து, அவற்றை உங்களை போன்றவர்களுக்கு கொடுப்பதற்காகதான் உற்பத்தி செய்து கொண்டிருக்கிறோம் என்றார்.

சென்னை

ஆயிரம் ஏக்கர் நிலம் இருந்தாலும் ரேஷன் அரிசி தான் சாப்பிடுகிறேன் என முன்னாள் அமைச்சர் கே.என். நேரு அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் காலை 9.30 மணிக்கு இன்றைய அலுவல்கள் தொடங்கின. கூட்டம் தொடங்கியதும், நேரமில்லா நேரம் எடுத்து கொள்ளப்பட்டது. கேள்வி நேரம் எடுத்து கொள்ளப்படவில்லை. அதற்கான விளக்கம் சபாநாயகர் தரப்பில் அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, சவுதி அரேபியாவில் தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் சட்டசபையில் அ.தி.மு.க. சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதனை தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் இதுதொடர்பாக அவையில் பேசினர்.

வெள்ளை நிற அரிசி

இன்றைய நிகழ்வில், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, கூட்டுறவு ஆகிய துறைகள் மீதான மானிய கோரிக்கைகள் விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி அது தொடர்பான விவாதத்தில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் வெங்கடரமணன் பேசினார்.

இதனை அடுத்து, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் கே.என். நேரு பேசினர். அவையில் அமைச்சர் செங்கோட்டையன் பேசும்போது, ரேஷன் கடை அரிசியை ஆட்டுக்கும், கோழிக்கும்தான் மக்கள் பயன்படுத்தி கொண்டிருக்கின்றனர் என்பதே உண்மை என்றார். இதனால், சர்ச்சை எழுந்தது. தி.மு.க. தரப்பில் இருந்து இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

பரம ஏழை

இதன்பின்னர், பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசும்போது, கே.என். நேருவிடம் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாய நிலங்கள் உள்ளன. அதனால், அவற்றிலேயே அவர் நெல் விளைவித்து கொள்கிறார். ஆனால், பரம ஏழையாக ரேஷன் கடையில்தான் அரிசி வாங்குகிறேன் என அவர் கூறி இன்றுதான் தெரிந்து கொண்டேன் என்றார்.

தொடர்ந்து அவர் பேசும்போது, சன்ன ரக நெல் அரிசிக்கு அதிக ஊக்கத்தொகை வழங்குவதற்கு காரணம், அதனை உற்பத்தி செய்ய வேண்டும் என பல்வேறு விவசாய சங்கங்களுடனான பலகட்ட ஆலோசனைக்கு பின்னர், முதல்-அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.

ரேஷன் அரிசி

நான் சிறு வயதில் இருக்கும்போது, ரேஷன் கடைக்கு சென்று அரிசி வாங்கி சாப்பிட்ட குடும்பம் என் குடும்பம். அரிசி பெரிய அளவில் இருக்கும். விவசாயிகள் எங்களிடம், பயிர்களை மாற்ற வேண்டுமென்றால், சன்ன ரக நெல்லுக்கு ஊக்கத்தொகையை உயர்த்தி கொடுங்கள் என்றனர்.

இதனால் முதல்-அமைச்சர், மற்ற ஆட்சியை விட்டு விடுவோம். நம்முடைய ஆட்சியில் மக்களுக்கு கொடுக்க கூடிய அரிசியை சன்ன ரக அரிசியாக கொடுப்போம் என்றார். அனைத்து ரேஷன் கடைகளிலும் தாய்மார்கள் உள்பட மக்கள் வாங்கி செல்ல கூடிய அரிசி, சாப்பிட கூடிய அளவில் இருக்க வேண்டும் என கூறியவர் முதல்-அமைச்சர் என்று பேசினார்.

தமிழகத்தில் மட்டும்தான்...

இதன்பின்னர், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரான காமராஜ் பேசும்போது, ரேஷன் அரிசி சாப்பிடுவதில்லை. வாங்குவதில்லை என 2 அமைச்சர்களும் கூறினர். இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் அனைவருக்கும் அரிசி வழங்கப்படுகிறது. மற்ற எல்லா இடங்களிலும் பகுதியளவே கொடுக்கிறார்கள். தமிழகத்தில் உள்ளது, அனைவருக்கும் அரிசி வழங்கும் ஒரு பெரிய திட்டம் என்றார்.

அப்போது அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குறுக்கிட்டு, நாங்கள் கொச்சைப்படுத்தவில்லை. இந்த அனைத்து திட்டங்களும் எந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்டாலும் அதில் நல்லவை உள்ளன. அமைச்சர்கள் இலவச அரியை பயன்படுத்தியது இல்லை. அது கருணை என்ற அடிப்படையில் இல்லாமல், தகுதி என்ற அடிப்படையில் இருக்க வேண்டும். மக்களை சென்றடைய வேண்டும். அது மக்களின் உரிமை. அதனையே கூறினோம் என்றார்.

கே.என். நேரு பேச்சு

இதனை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் கே.என். நேரு பேசும்போது, சன்ன ரக நெல்லை நாம் செய்ய முடியாது. அது அதிக அளவில் கிடைப்பதில்லை. ஆந்திரா பொன்னி போன்ற சில அரிசி ரகம் மட்டுமே அதிகம் கிடைக்கும். சன்ன ரகம் ஒரு பட்டத்தில்தான் பெற முடியும். அவற்றை வெளியில் இருந்து தான் வாங்க முடியும். அதிகம் விளைவிக்க முடியாது என்றார்.

ஆயிரக்கணக்கான நெல் வைத்திருக்கிறேன் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறினார். எவ்வளவு நிலங்கள் இருந்தாலும், சாப்பிடறதுதான் சாப்பிட முடியும். சர்க்கரை நோய் வந்தவர்கள் அந்த ரேஷன் அரிசி சாப்பிட்டால்தான் குறையும் என டாக்டர் கூறினார். அந்த அறிவுரையின் பேரிலேயே அந்த அரிசியை சாப்பிட்டு வருகிறோம். இதுதான் உண்மை.

ஏதோ நாங்கள் உற்பத்தி செய்து, அவற்றை உங்களை போன்றவர்களுக்கு கொடுப்பதற்காகதான் உற்பத்தி செய்து கொண்டிருக்கிறோம் என்றார்.