சென்னை,
காங்கிரஸை நம்பிச் செல்பவர்கள் யாரும் உருப்பட முடியாது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
நடைபெற்று வரும் இடைத்தேர்தல் எந்தப் பரபரப்பும், விறுவிறுப்பும் இல்லாமல் நடைபெறுகிறது. பொதுத்தேர்தலில் மக்களிடம் இருந்த அதே ஆர்வம் இடைத்தேர்தலில் காணப்படவில்லை. மீண்டும் மீண்டும் தேர்தல்களைச் சந்திக்க வேண்டுமா என்ற சுணக்கமே மக்களிடம் நிலவுகிறது
நாங்களாம் ஒரு முறையாவது வெற்றி பெற முடியாதா, மக்களுக்குச் சேவை செய்ய முடியாதானு நினைச்சிட்டு இருக்கும்போது, கொடுத்த வெற்றி வாய்ப்பை தூக்கிப்போட்டு விட்டு மறுபடியும் அந்த மக்கள் கிட்ட வாக்கு கேட்பது சரியில்லை. முதல்-அமைச்சர் இதை ஊக்கப்படுத்தக் கூடாது.
தனது 16 வயது பெண் குழந்தையைக் கேலி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையம் சென்ற தந்தை வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்குத் தந்தையர்களே பாதுகாப்பு அளிக்க முடியாத சூழல் நிலவுவது வேதனைக்குரியது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கும், பெண் குழந்தைகளின் பாதுகாப்பும் ஆட்டம் கண்டுள்ளது.
தேர்தல் ஆணையம் மற்றும் 'எஸ்.ஐ.ஆர்' (SIR) விவகாரத்தில் இந்தியா கூட்டணி நடத்தி வருவது, வெற்றி பெற முடியாதவர்களின் தோல்வி பேரணி. காங்கிரஸும், த.வெ.க-வும் எஸ்.ஐ.ஆர்க்குப் பிறகுதான் வெற்றிகளைப் பெற்றுள்ளன. எஸ்.ஐ.ஆர்க்கு எதிராகப் போராடுபவர்கள் தங்கள் சொந்த வெற்றிக்கே எதிராகப் போராடுவதற்குச் சமம்.
காங்கிரஸ் கூட சேர்ந்தவங்க யாரும் உருப்படவே முடியாது.திமுக காரங்க கிட்ட கேட்டு பாருங்க.. அவங்கள முதுகுள குத்துனவங்க விஜய் முதுகில் குத்துறதுக்கு ரொம்ப நேரம் ஆகாது.
நாங்க வந்தா எல்லாம் செஞ்சிடுவோம்னு சொன்ன ஆதவ் அர்ஜுனா, செவிலியர்களை இப்படி குண்டு கட்டாக தூக்கிட்டுப் போய் பாடாய் படுத்துவது நல்லதல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.