சேந்தமங்கலம்,
நாமக்கல் மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சம் சுற்றுலாத்தலமாக கொல்லிமலை விளங்கி வருகிறது. அந்த மலை பகுதியில் கோடை மழை பெய்யாததால் அங்குள்ள நம் அருவி மற்றும் மாசிலா அருவி ஆகியவற்றில் தண்ணீர் வரத்து இன்றி காணப்பட்டு வருகிறது. இதனால் அந்த அருவிக்கு செல்லும் பாதை மூடப்பட்டுள்ளது.
இருப்பினும் பிரசித்தி பெற்ற அரப்பளீஸ்வரர் கோவில் அருகில் சுமார் 300 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் கொட்டி வரும் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் தற்போதும் நீர்வரத்து இருந்து வருகிறது. அந்த அருவிக்கு வரும் நீரோட்டப்பாதையில் ஊற்று நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் நீர்வீழ்ச்சியில் தற்போதும் தண்ணீர் கொட்டி வருகிறது. இதனால் அந்த அருவியை கண்டு ரசித்தும், குளித்தும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
மேலும், அருவிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளில் சிலர் எண்ணெய் பாக்கெட்டுகள் மற்றும் சிறிய பாட்டில்களை ஆங்காங்கே வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் மற்ற சுற்றுலா பயணிகள் அங்கு தவறி விழும் வாய்ப்பு உள்ளது. எனவே நீர்வீழ்ச்சியின் தடாக பகுதியை சுத்தமாக வைத்து கொள்ள சுற்றுலா பயணிகள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கொல்லிமலை வனத்துறையினர் தெரிவித்து அறிவித்துள்ளனர்.