பொதுவாக கோட்-சூட்டில் வலம் வரும் முதல்-அமைச்சர் விஜய், பிரதமர் மோடியின் சென்னை நிகழ்ச்சிகள் முழுவதும் கருப்பு நிறத்தை ஒருமித்த அடர் கருநீலச் சட்டை, பேண்ட் அணிந்திருந்தார். இந்த உடைத் தேர்வு தற்போது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய ஐ.ஐ.டி. நிகழ்ச்சியில் த.வெ.க. தொண்டர்கள் சிலர், எங்கள் தலைவர் உடையிலேயே தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். தனது அரசியல் நிலைப்பாட்டை உணர்த்தும் குறியீடுதான் அது என்று கூறினர்.
தமிழக அரசியலைப் பொறுத்தவரை கருப்பு நிறம் சுயமரியாதை மற்றும் திராவிட இயக்க அரசியலுடன் தொடர்புபடுத்தி பார்க்கப்படுகிறது. அதனால்தான் பிரதமர் நிகழ்ச்சியில், விஜய்யின் உடை பேசுபொருளாகி இருக்கிறது. ஆனால் த.வெ.க. தலைவர்கள் உடையில் எந்தக்குறியீடும் இல்லை என்றனர். அதேபோல விழாவில் பேசும்போது விஜய், ஒன்றிய அரசு என்ற வார்த்தையையும் பயன்படுத்தினார்
மேலும் பிரதமருக்கு தனது கோரிக்கைகள் புரிய வேண்டும் என்ற அடிப்படையில் அதனை ஆங்கிலத்தில் பட்டியலிட்டு பேசினார். ஆனால் விஜய்யின் கோரிக்கை குறித்து பிரதமர் மோடி பேசும்போது, எந்தப் பதிலும் அளிக்கவில்லை. அதேபோல மேடையில் திட்ட அடிக்கல் நாட்டும் பட்டனை அழுத்தும்போது பிரதமர் மோடி, விஜய்யின் கையைப் பிடித்து இழுத்து தன்னுடன் சேர்த்துக்கொண்டார்.
சென்னை வந்த பிரதமர் மோடி, விமான நிலையத்தில் இருந்து பாதுகாப்பு வாகனங்கள் புடைசூழ காரில் பயணித்தார். இதற்காக ஒழுங்குப்படுத்தப்பட்ட பாதுகாப்பு வாகன வரிசையில் (கான்வாய்) முதல்-அமைச்சர் விஜய்யின் காரும் இணைந்து பயணித்தது. போரூரில் மெட்ரோ ரெயில் திட்டத்தை தொடங்கியது முதல், சென்னை ஐ.ஐ.டி.யில் நடந்த அரசு விழா வரை பிரதமர் மோடியின் 'கான்வாய்' வரிசையிலேயே முதல்-அமைச்சர் விஜய்யின் காரும் பயணித்து சென்றது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி, ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள ஸ்ரீ ஜலகண்டேஸ்வர சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவிலில் அமைந்துள்ள ராம எந்திரத்தை பார்த்த பிரதமர் மோடி, அதன் மீது தாமரை மலரை வைத்து பிரார்த்தனை செய்தார்.அப்போது அவருடன் கவர்னர் ஆர்.வி.அர்லேகர், முதல்-அமைச்சர் விஜய், சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி ஆகியோர் உடன் இருந்தனர்.