தமிழக செய்திகள்

‘ஒவ்வொரு கட்சியும் தேசியவாதத்தை முன்னிறுத்த வேண்டும்’ - வானதி சீனிவாசன்

பாஜகவினருக்கு எல்லாவற்றையும் விட தேசம் தான் முக்கியம் என வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

சென்னை,

‘ஒவ்வொரு கட்சியும் தேசியவாதத்தை முன்னிறுத்த வேண்டும்’ என பாஜக முன்னாள் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

முன்பெல்லாம், காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக, ஆம் ஆத்மி போன்ற கட்சிகள், "தேசியத்திற்கு பாஜக மட்டும் தான் அத்தாரிட்டியா, பாஜகவை எதிர்ப்பவர்கள் எல்லாம் தேச விரோதியா?" என்று பாஜகவினரை நோக்கி கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தார்கள். அதே கேள்வியை, இப்போது, பாஜகவால் அரசியல் அடையாளம் பெற்று, வெளியேறியவர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தேசியத்திற்கு பாஜக தான் அத்தாரிட்டி

பாஜக ஒருபோதும், 'தேசியத்திற்கு, இந்துத்துவத்திற்கு அத்தாரிட்டி' என்று சொன்னதில்லை. சொல்லப் போவதும் இல்லை. ஆனால், 'தேசியத்திற்கு, இந்துத்துவத்திற்கு பாஜக தான் அத்தாரிட்டி' என்பது, தேச விரோதிகளுக்கு தெரிந்திருக்கிறது.

பாஜகவின் விருப்பம்

இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனும், 'நான் தேசியவாதி' என்றும், இந்தியாவில் செயல்படும் கட்சிகள், அமைப்புகள் அனைத்தும், 'நாங்கள் தேசியவாதி' என்றும் உணர வேண்டும். 'தேசியத்துக்கு நாங்கள் தான் அத்தாரிட்டி' என்று ஒவ்வொரு கட்சியும் சொல்ல வேண்டும் என்பதுதான் பாஜகவின் விருப்பம்.

1980ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி மும்பையில் பாஜக தொடங்கப்பட்டது. தொடக்க விழாவில் பேசிய பாஜகவின் முதல் தலைவர் அடல் பிகாரி வாஜ்பாய், 'Nation First; Party Next; Self Last' என்பதுதான் பாஜகவின் கொள்கை என்று பிரகடனம் செய்தார். ஒவ்வொரு பாஜக தொண்டரின் உயிர்மூச்சும் இதுதான். பாஜகவினருக்கு எல்லாவற்றையும் விட தேசம் தான் முக்கியம்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT