தமிழக செய்திகள்

‘ஒவ்வொரு கட்சியும் வாக்காளர்களை கவர அறிவிப்பு வெளியிடும்’ - த.வெ.க. குறித்த கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதில்

மகளிருக்காக அ.தி.மு.க. பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நேற்று மாமல்லபுரத்தில் நடைபெற்ற மகளிர் தின விழாவில், அக்கட்சியின் தலைவர் விஜய், மகளிருக்கான பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார். அதில் குறிப்பாக திருமணத்திற்கு 8 கிராம் தங்கம், அனைத்து பேருந்துகளிலும் மகளிருக்கு இலவசம், குடும்ப தலைவிகளுக்கு மாதம் 2,500 ரூபாய் உள்ளிட்ட அறிவிப்புகள் கவனத்தைப் பெற்றுள்ளன.

அதே சமயம், இலவசங்கள் தொடர்பான அறிவிப்புகளை விஜய் வெளியிட்டிருப்பது குறித்து பல்வேறு தரப்பினர் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், த.வெ.க. சார்பில் வெளியிடப்பட்ட மகளிருக்கான அறிவிப்புகள் குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அவர், “ஒவ்வொரு கட்சியும் வாக்காளர்களை கவர பல்வேறு அறிவிப்புகளை வெளியிடும். மகளிருக்காக அ.தி.மு.க. பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. குடும்ப தலைவிகளுக்கு 2 ஆயிரம் ரூபாய் வங்கியில் செலுத்தப்படும், 5 லட்சம் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் வழங்கும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை பெண்களுக்காக அறிவித்துள்ளோம்” என்று தெரிவித்தார்.