தமிழக செய்திகள்

மதநல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டு; நாகூர் ஆண்டவர் தர்காவில் இந்து மத ஜோடிக்கு திருமணம்

நாகூர் தர்கா நிர்வாக தலைவர் முகமது கலிபா சாஹிப் மற்றும் மணமக்களின் பெற்றோர், உறவினர்கள், உள்ளிட்டோர் மணமக்களுக்கு அட்சதை தூவி வாழ்த்தினர்.

நாகூர்

நாகூர் ஆண்டவர் தர்காவில் மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக, இந்து மத ஜோடிக்கு திருமணம் நடந்தது.

நாகை மாவட்டம் நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவிற்கு நாள்தோறும் உள்ளூர், வெளியூர், வெளிமாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக திகழும் நாகூர் தர்காவில் இஸ்லாமியர்கள் மட்டுமல்லாது அனைத்து மதத்தினரும் வழிபட்டு செல்வதை பார்க்க முடியும்.

இந்து மணமக்கள்

இந்த நிலையில், நாகூர் தர்காவில் மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக இந்து மணமக்களுக்கு நேற்று திருமணம் நடந்தது. முன்னதாக மணமக்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், மணமக்களை நாகூர் தர்காவிற்கு காலையிலேயே அழைத்து வந்தனர்.

இதன்பின்னர் ஆண்டவர் சன்னதி முன்பு மணமக்களை அமர வைத்தனர். இதையடுத்து மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்டினார். அப்போது அங்கு இருந்த நாகூர் தர்கா நிர்வாகம் மற்றும் ஆலோசனை குழு தலைவர் முகமது கலிபா சாஹிப் மற்றும் மணமக்களின் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள், திருமணத்துக்கு வந்து இருந்தவர்கள் மணமக்களுக்கு அட்சதை தூவி வாழ்த்தினர்.

நாள்தோறும் வழிபாடு

நாள்தோறும் நாகூர் தர்காவுக்கு இந்து மதத்தை சேர்ந்தவர்கள் வந்து வழிபட்டு சென்றாலும், இதுபோன்று திருமணங்கள் நடந்ததை பார்த்து மணமக்களின் பெற்றோருக்கு, தர்காவுக்கு வந்து இருந்தவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT