சென்னை,
ரெயில் நிலையங்களில் உள்ள பிளாட்பாரங்களுக்கும், அந்த வழியாக செல்லும் ரெயில்களின் பெட்டிகளுக்கும் அதிக இடைவெளி உள்ளது.
இது தொடர்பாக மதுரையை சேர்ந்த ஜஹாங்கீர் பாதுஷா, மதுரை ஐகோர்ட்டில் கடந்த 2025-ம் ஆண்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
நம் நாட்டில் அதிக அளவில் ரெயில்களில்தான் மக்கள் பயணம் செய்கின்றனர். ரெயில் நிலையங்களில் உள்ள பிளாட்பாரங்களுக்கும், அந்த வழியாக செல்லும் ரெயில்களின் பெட்டிகளுக்கும் அதிக இடைவெளி உள்ளது. இதனால் பிளாட்பாரங்களில் இருந்து ஓடி ரெயில் பெட்டிகளில் ஏறும் பயணிகளில் பலர் தவறி விழுந்து இறப்பது, காயம் அடையும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி இதுபோன்ற விபத்துகளில் சிக்கியதில் 41,596 பேர் இறந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
எனவே பயணிகளின் பாதுகாப்பு கருதி மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருப்பதைபோல நாட்டின் அனைத்து ரெயில் நிலையங்களின் பிளாட்பாரங்களை இடைவெளி இன்றி இருக்கும் வகையில் சீரமைக்கவும், அனைத்து ரெயில் நிலையங்களிலும் வைபை வசதி உள்ளிட்டவற்றை ஏற்படுத்தவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி வேல்முருகன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ரெயில்வே நிர்வாகம் சார்பில் ஆஜரான வக்கீல், மனுதாரர் தெரிவிக்கும் யோசனையை நிறைவேற்றுவதில் சிக்கல்கள் உள்ளன என தெரிவித்தார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இதுதொடர்பான விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் மாதம் 10-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.