9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை 1-ந்தேதி முதல் 3 மொழிகள் கட்டாயம் எனவும் அதில் 2 மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்றும் சி.பி.எஸ்.இ. அறிவித்தது. இதை எதிர்த்து பல்வேறு தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜோய் மால்யா பாக்சி, மோகனா அமர்வு விசாரித்து வருகிறது. 3 மொழி கொள்கையை அமல்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இதனால் மாணவர்கள் எத்தகைய அழுத்தத்துக்கும் ஆளாகக்கூடாது என்றும் வலியுறுத்தினர். பின்னர் இந்த கொள்கை 6-ம் வகுப்பிலேயே அறிமுகப்படுத்தினால், இந்த ஆண்டு விட்டுவிட்டு அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யுமாறும் அறிவுறுத்தி இருந்தனர்.
இந்த நிலையில் தலைமை நீதிபதி அமர்வில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மீண்டும் இந்த கருத்தை நீதிபதிகள் வலியுறுத்தினர். அதன்படி நீதிபதிகள் கூறுகையில், 'இந்த ஆண்டு 6-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு விலக்கு அளிக்க முடியுமா?' என்று பரிசீலிக்குமாறு சி.பி.எஸ்.இ. தரப்பை நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர். அதற்கு சி.பி.எஸ்.இ. சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சம்பந்தப்பட்ட தரப்பினருடன் ஆலோசித்து கூறுவதாக தெரிவித்தார். எனினும் இந்த விவகாரத்தில் எந்த உறுதிமொழியையும் அவர் அளிக்கவில்லை.நாங்கள் அனைவரும் அமர்ந்து ஆலோசித்து கூறுகிறோம்' என்று மட்டும் கூறினார். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கின் அடுத்த விசாரணையை வருகிற 17-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.
அதேநேரம் வழக்கு தொடர்ந்து ஒத்திவைக்கப்படுவதற்கு மனுதாரர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மாணவர்கள் தேர்வு எழுத வேண்டியிருப்பதாலும், அது அவர்களது பெற்றோரிடையே கவலையை ஏற்படுத்துவதாலும், மேலும் ஒத்திவைப்புகளால் இந்த விஷயத்தை தாமதப்படுத்தக்கூடாது என்று மனுதாரர்களின் வக்கீல் ஒருவர் கேட்டுக்கொண்டார். எனினும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பட்டி வராததால், விசாரணையை ஒத்திவைக்க சொலிசிட்டர் ஜெனரல் கேட்டுக்கொண்டார். எனவே குறைந்த நாட்களுக்கு மட்டுமே தள்ளி வைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.