சென்னை
சென்டிரல் ரெயில் நிலையத்தில் நடந்த கண்காட்சியில், பயணிகள் மற்றும் குழந்தைகளை கவர்ந்த கலைப்படைப்புகள் வைக்கப்பட்டிருந்தன.
ரெயில்வே ஊழியர்களின் பன்முகத்திறமையை வெளிப்படுத்தும் விதமாக "கழிவில் இருந்து கலை" என்ற புதுமையான கண்காட்சி சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் நேற்று நடைபெற்றது. தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்டம் சார்பில் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வரும் தூய்மை பிரசாரத்தின் ஒரு பகுதியாக நடந்த, இந்த கண்காட்சியை தெற்கு ரெயில்வேயின் தலைமை ரோலிங் ஸ்டாக் என்ஜினீயர் வி.எஸ்.பிரபாகர் தொடங்கி வைத்தார்.
தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் யு.சுப்பாராவ் மற்றும் சென்னை கோட்ட ரெயில்வே மேலாளர் சைலேந்திர சிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோட்ட அதிகாரிகள் மற்றும் ஏராளமான ரெயில்வே ஊழியர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இதில், பயன்படுத்த முடியாத பழைய ஸ்பிரிங்குகள், உலோகக்கலன்கள், டிரம்ஸ்கள் மற்றும் என்ஜின் பாகங்கள் என மொத்தம் 2,665 கிலோ கழிவு பொருட்களை சேகரித்து, அழகிய கலை பொருட்களாக மாற்றினார்கள். கண்காட்சியில், தேசியக் கொடியை ஏந்தியபடி நிற்கும் கார்கில் விஜய் திவாஸ் நினைவு, இஸ்ரோ ராக்கெட் மாதிரி மற்றும் இந்திய வரைபடம், மயில் உருவம், விலங்குகளின் வடிவங்கள், பழமையான ரெயில்கள் என வைக்கப்பட்டிருந்த பல்வேறு படைப்புகள் பயணிகளையும் குழந்தைகளையும் வெகுவாக கவர்ந்தன.