வேலூர்,
வேலூர் மாவட்டம் அர்ஜுனாபுரத்தில் உள்ள வெடிமருந்து கிடங்கில் நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் கட்டிடம் முற்றிலும் தரைமட்டமானது. இந்த விபத்தின் தாக்கத்தால் அருகில் இருந்த ஒரு கன்றுக்குட்டி பரிதாபமாக உயிரிழந்தது.
வேலூர் மாவட்டம் கே.வி. குப்பம் அருகே உள்ள அர்ஜுனாபுரத்தில் வெடிமருந்து கிடங்கு ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று (புதன்கிழமை) நள்ளிரவு வெடிமருந்து கிடங்கில், திடீரென தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது. அடுத்த சில நொடிகளில் அங்குள்ள வெடிபொருட்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறின. இந்த வெடிச்சத்தம் பல கிலோமீட்டர் தூரத்திற்கு கேட்டதால், சுற்றியுள்ள கிராம மக்கள் கடுமையான அதிர்ச்சியிலும் பயத்திலும் உறைந்தனர்.
விபத்தின் வீரியம் காரணமாக, வலுவான அந்த வெடிமருந்து கிடங்கு கட்டிடம் அடியோடு இடிந்து தரைமட்டமானது. இதில் சம்பவ இடத்திற்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த 3 மினி வேன்கள் தீயில் கருகி சேதமடைந்தன. இதனைத் தொடர்ந்து அருகில் கட்டப்பட்டிருந்த ஒரு கன்றுக்குட்டி இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானது. மேலும் பல லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் தீயில் கருகி நாசமாகின. நள்ளிரவு நேரம் என்பதால் கிடங்கிற்குள் ஊழியர்கள் யாரும் இல்லாததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் மற்றும் கே.வி. குப்பம் போலீசார், இடிபாடுகளை அகற்றி மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். விபத்திற்கான காரணம் மின்கசிவா அல்லது வேறு ஏதேனும் கவனக்குறைவா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அண்மையில் வேலூர் அணைக்கட்டு பகுதியில் பட்டாசு விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், மீண்டும் ஒரு விபத்து நடந்திருப்பது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.